📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 20, 2026 09:04 PM

Ram and Leela Review: ராம் அண்ட் லீலா விமர்சனம்.. அவளும் பெண் தானே.. அவள் நிஜமாவே பெண் தானா?

Ram and Leela Review: ராம் அண்ட் லீலா விமர்சனம்.. அவளும் பெண் தானே.. அவள் நிஜமாவே பெண் தானா?

சென்னை: டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ், வர்த்திகா நடிப்பில் உருவாகியுள்ள ராம் அண்ட் லீலா (Ram and Leela) திரைப்படம் ஆகஸ்ட் 21ம் தேதி திரைக்கு வருகிறது.

ரியோ ராஜ் தொடர்ந்து தனக்குள் இருக்கும் புரட்சியாளரை ஃபன் கலந்து வெளியே கொண்டு வந்துக் கொண்டே இருக்கிறார். ஆண் பாவம் பொல்லாதது படத்திற்கு பிறகு ரியோ ராஜ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் செம ட்ரீட்டாக அமையும்.

ராம் இன் லீலா என்கிற டைட்டிலிலேயே படத்தின் கதை இருந்த நிலையில், ராம் அண்ட் லீலா என மாற்றப்பட்ட நிலையில், கதை கனெக்ட் ஆகவில்லை என்றாலும் படம் எந்தளவுக்கு ரசிகர்களை கனெக்ட் செய்யும் என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

ராம் அண்ட் லீலா விமர்சனம்: பிரியாணியில் போடும் 4 ஏலக்காயும் தன் தட்டிலே வந்து விழும், பொங்கலில் போட்ட அத்தனை மிளகும் தனது தொன்னையிலேயே வந்து விழும் அளவுக்கு ராசியான ஒரு ஹீரோவாக ரகுராம் கதாபாத்திரத்தில் ரியோ ராஜ் நடித்துள்ளார். டெட்பூல் படத்தில் வரும் ஹீரோ போல இஷ்டத்துக்கு கேமராவை பார்த்து ஆடியன்ஸிடம் ஆரம்பத்தில் இருந்து கிளைமேக்ஸ் வரை பேசும் அப்ரோச் நல்லாவே ஒர்க்கவுட் ஆகியுள்ளது.

தலையில் ஒற்றை வெள்ளை முடி எட்டிப் பார்க்கும் அளவுக்கு வயசாகி விட்டது, திருமணத்துக்காக பெண் தேடும் இண்டர்வியூ பயணத்தில் தொடர்ந்து பல்பு வாங்கி வரும் ஹீரோவுக்கு எப்படியாவது ஒரு பெண் கிடைத்து விட்டால் போதும் என நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், லோக்கல் டிரைனில் அழகு தேவதையாக லீலா (வர்த்திகா) என்ட்ரி கொடுக்கிறார். அதே சமயம் ரகு ராமுக்கு ராம் எனும் நண்பனும் பழக்கம் ஆகிறார்.

25 நாட்கள் ஹீரோயினை ரயிலில் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருக்கும் ஹீரோ காதலை சொல்ல வர, நீங்க ராம் தானே தெரியும் என ஹீரோயின் முந்திக்கொள்ள ராமுக்குள் லீலா காதலியாக ஃபிக்ஸ் ஆகிவிடுகிறாள்.

ஆனால், 6 மணிக்கு மேல என்னை பார்க்கவோ, பேசவோ கூடாது என அவள் போடும் அந்த ஒரு கண்டிஷனுக்கும் ஓகே சொல்லி பெண் கிடைத்தால் போதும் என காதலிக்கத் தொடங்கும் ராம் திருமணம் நிச்சயம் ஆன பின்னரும், அதே கண்டிஷனை லீலா போடும் இடத்தில் டென்ஷன் ஆகிறார்.

லீலா அந்த கண்டிஷனை ஏன் போடுகிறாள்? 6 மணிக்கு மேல அவளுக்கு என்ன பிரச்னை? என்பதை ஃபேண்டசி கலந்து கலகலப்பாக இயக்குநர் கடத்த முயற்சித்துள்ளார். 6 மணிக்கு மேலே லீலாவை ராம் பார்த்தானா? இருவருக்கும் இடையே திருமணம் நடந்ததா? இல்லையா? என்பது தான் ராம் அண்ட் லீலா படத்தின் கதை.

பிளஸ்: ரியோ ராஜ் வழக்கம் போலவே நல்ல சிரிப்புடன் படம் முழுக்க அழகாக நடித்துள்ளார். புரட்சியாளர் என தன்னைத் தானே அவர் சொல்லிக் கொள்ளும் இடங்கள் எல்லாம் நகைச்சுவை கலந்த நய்யாண்டி ஒர்க்கவுட் ஆகிறது. இளிச்சவாயன் என்பதற்கு சரியான ஒரு எக்ஸாம்பிளாக ராம் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் ஆடியன்ஸ் உடனே தனது ஸ்டோரியை சொல்லிக் கொண்டே நகர்த்தும் விதம் சிறப்பு.

அழகு தேவதையாக வரும் வர்த்திகா 6 மணிக்கு மேலே இப்படியொரு சுயரூபம் எடுப்பாரா? என்கிற இடைவேளை ட்விஸ்ட் படத்துக்கு பெரிய பலமாக மாறுகிறது. ஆரம்பத்திலேயே கிரேஸி மோகனுக்கு தேங்ஸ் கார்டு போட்டது போல இயக்குநர் பல இடங்களில் கிரேஸி மோகன் அப்ரோச்சை கையாண்ட விதமும் சிறப்பு. குறிப்பாக அந்த ரயில் சீனில் ரூமில் இருந்து சைக்கிளில் ஹீரோயினை கூட்டி வந்து ரயில் ஏற்றி விட்டு, பெற்றோர்களை ஏமாற்றும் காட்சி காமெடி கலாட்டா. தீபா வெங்கட் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில் மிரட்டியுள்ளார். மல்லிகா அர்ஜுனின் ஒளிப்பதிவில் படம் ரொம்பவே ரிச்சாக தெரிகிறது. அன்கித் மேனன் இசையில் காதல் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது.

மைனஸ்: ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் சாயல் 2ம் பாதியில் வருவது படத்திற்கு பெரிய நெகட்டிவாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. சேத்தன் மற்றும் மாளவிகா அவினாஷுக்கு பெரிய ரோல் இல்லாதது வருத்தம். லாஜிக் மீறல்கள், இரட்டை அர்த்த வசனங்கள், சுமாரான காட்சிகள் என அடிக்கடி வந்து படத்தின் ஓட்டத்திற்கு வேகத்தடை போடுவதை சரி செய்திருக்கலாம். ஆனால், காதலுக்கு சாதி, மதம், ஆண், பெண் பேதம் எல்லாம் முக்கியம் என்பதை தாண்டி இன்னொரு எல்லைக்கு ஃபேண்டஸியாக படம் நகர்ந்த விதம் காரணமாக ஜாலியாக தியேட்டரில் பார்க்கலாம்.