ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளராக வருவார்.. கோலி குறித்தும் அஸ்வின் கணிப்பு
ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளராக வருவார்.. கோலி குறித்தும் அஸ்வின் கணிப்பு
மும்பை: ஓய்வுக்குப் பிறகு ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக வரக்கூடும் என்றும், ஆனால் விராட் கோலி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் முன் சிறிது காலம் ஓய்வெடுக்க விரும்பலாம் என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆடவர் அணிக்கு கடந்த ஒரு மாதம் ஓய்வு காலமாகவே அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு பிறகு, பெரிய அளவில் பரபரப்போ, சர்ச்சைகளோ அல்லது சுவாரஸ்யமான சம்பவங்களோ நடக்கவில்லை. ஐபிஎல் தொடரில் வீரர்களின் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் பயிற்சியாளர்களின் மாற்றம் ஆகியவையே தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக உள்ளன.
எதிர்காலத்தில் ஒருநாள் பயிற்சியாளராக வேண்டும் என்ற கனவைக் கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினிடம், இந்தியாவின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் எதிர்காலத்தில் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அஸ்வின், "விராட் கோலி உடனடியாக பயிற்சியாளராக தயாராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. இருவரும் மிகக் கடினமாக உழைத்துள்ளனர். ஒருவேளை ரோஹித் சர்மா ஏதேனும் ஒரு பொறுப்பில் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் வரலாம். நேர்மையாகச் சொல்வதானால் விராட்டைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை கோலி சிறிது காலம் ஓய்வெடுக்கவே விரும்புவார்."
எதிர்காலத்தில் ஃபிரான்சைஸ் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் என்று கணித்துள்ள அஸ்வின், அத்தகைய சூழலில் மென்ட்டர், கிரிக்கெட் இயக்குனர் மற்றும் செயல்திறன் இயக்குனர் போன்ற சிறப்புப் பணியிடங்கள் அதிகம் உருவாகும் என்றும், இது வெற்றிகரமான வீரர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்றும் கூறினார்.
"நாளை ரோஹித் 'நான் விளையாடப் போவதில்லை' என்று முடிவு செய்தால், மும்பை இந்தியன்ஸ் அவரை உடனடியாக தங்கள் அணியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்" என்று அஸ்வின் கூறினார். "ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று, இந்தியாவை உலகக் கோப்பை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஒரு கேப்டனை உங்களால் எளிதில் கண்டறிய முடியாது. தலைமைப் பயிற்சியாளர் என்பது அதிக உழைப்பு தேவைப்படும் பணி என்பதால் அவர் அதை உடனடியாக விரும்பாமல் போகலாம்."
"ஆனால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஓய்வுக்குப் பிறகு அவர் ஏதேனும் ஒரு பொறுப்பை ஏற்கத் தயாராகிவிடுவார். ராகுல் பாய் கூட சிறிது காலம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினார். எனவே, இதுபோன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவர்களை விட்டுவிடக் கூடாது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியைப் பற்றி எனக்குத் தெரியும், ரோஹித் சர்மாவின் புத்திசாலித்தனமான சிந்தனைத் திறன் கொண்ட ஒரு வீரரை அவர்கள் அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டார்கள்" என்றும் அவர் மேலும் கூறினார்.