📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 11, 2026 04:00 PM

டெல்லி இன்னோவா க்ரிஸ்ட்டா காரை தமிழகத்தில் வாங்குவது லாபமா? இத படிங்க முதல்ல!

டெல்லி இன்னோவா க்ரிஸ்ட்டா காரை தமிழகத்தில் வாங்குவது லாபமா? இத படிங்க முதல்ல!

தமிழகத்தில் பயன்படுத்திய கார் வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனத்தை தற்போது டெல்லி பதிவு கொண்ட கார்கள் ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா போன்ற டீசல் கார்கள் குறைந்த விலையில் கிடைப்பதாக முகவர்கள் விளம்பரப்படுத்துகின்றனர். டெல்லியில் பழைய வாகனங்களுக்கான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் இதற்குப் பின்னணியில் உள்ளன.

ஆனால், குறைந்த விலையில் கார் கிடைப்பதால் மட்டும் அது நல்ல வாங்குதலாகிவிடாது. தமிழகத்தில் மறுபதிவு செய்ய வேண்டிய நடைமுறைகள், சாலை வரி, ஆவணச் செலவுகள், பராமரிப்புச் செலவு என அனைத்தையும் கணக்கிட்ட பிறகே முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக, இன்னோவா க்ரிஸ்டா வாங்க நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன? என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

டெல்லியில் கட்டுப்பாடுகள்

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பழைய வாகனங்களுக்கான வயது மற்றும் மாசு உமிழ்வு தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளன. 2025 டிசம்பர் 17 அன்று உச்ச நீதிமன்றம், பிஎஸ்-4 (BS-IV) மற்றும் அதற்குப் பிந்தைய தரநிலைகளைக் கொண்ட வாகனங்கள் வயதை மட்டும் காரணமாகக் கொண்டு நடவடிக்கைக்கு எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

டெல்லியில் இருந்து காரை வாங்கும்போது, வாகன் (VAHAN) இணையதளத்தில் பதிவு விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். ஆர்சி புத்தகத்தில் உள்ள பதிவு எண், சேஸிஸ் எண், எஞ்சின் எண் ஆகியவற்றை காரில் உள்ள எண்களுடன் ஒப்பிட வேண்டும். மேலும், கார் பிஎஸ்-4 அல்லது பிஎஸ்-6 தரத்தில் உள்ளதா, காப்பீடு செல்லுபடியாகிறதா, அபராதங்கள் அல்லது கடன் நிலுவையில் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் மறுபதிவு செய்வது எப்படி?

டெல்லி ஆர்டிஓவில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெறுவதற்கு படிவம் 28 பயன்படுத்தப்படுகிறது. உரிமையாளர் மாற்றத்திற்கு படிவங்கள் 29 மற்றும் 30 தேவைப்படும். தமிழகத்தில் புதிய பதிவு எண்ணைப் பெறுவதற்கு படிவம் 27 உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும். வேறு மாநில பதிவு எண் கொண்ட வாகனத்தை தமிழ்நாட்டிற்குள் 12 மாதங்களுக்கு மேல் நிரந்தரமாக பயன்படுத்தும்போது புதிய பதிவு எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 47-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி போக்குவரத்துத் துறையின் நடைமுறையில், NOC பெற்ற பிறகு குறிப்பிட்ட மாநிலத்தில் ஒரு மாதத்திற்குள் மறுபதிவு செய்வது கட்டாயம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, காரை வாங்குவதற்கு முன்பே நீங்கள் தமிழகத்தில் எந்த ஆர்டிஓவில் மறுபதிவு செய்யவதற்கு திட்டமிடுகிறீர்களோ, அந்த ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று தகுதியை உறுதிப்படுத்த வேண்டும். கடன் நிலுவையில் இருந்தால் நிதி நிறுவனத்தின் NOC, செல்லத்தக்க காப்பீடு மற்றும் வாகன உரிமையாளரின் அடையாளச் சான்று, முகவரிச் சான்று உள்ளிட்ட தேவையான பிற ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

தமிழக சாலை வரி எவ்வளவு?

தமிழகத்தில் பழைய காருக்கு புதிய பதிவு எண் பெறும்போது, அதன் அசல் கொள்முதல் விலை மற்றும் வயதின் அடிப்படையில் ஆயுட்கால வரி கணக்கிடப்படுகிறது. தமிழக அரசின் 2023 சட்டத் திருத்தத்தின்படி, ரூ.10 லட்சத்துக்கு மேல் முதல் ரூ.20 லட்சம் வரையிலான கொள்முதல் விலையுள்ள கார்களுக்கு, 8 ஆண்டுகளுக்கு மேல் முதல் 9 ஆண்டுகள் வரை வயதுடைய வாகனங்களுக்கு 14.75% வரி கணக்கிடப்படும். ரூ.20 லட்சத்திற்கு மேல் அசல் விலையுள்ள கார்களுக்கு இதே வயதில் 16.75% வரி பொருந்தும்.

உதாரணமாக, அசல் கொள்முதல் விலை ரூ.17 லட்சமாகவும், கார் 8-9 ஆண்டுகள் வயதுடையதாகவும் இருந்தால், வரி சுமார் ரூ.2.51 லட்சமாக. அசல் விலை ரூ.21 லட்சமாக இருந்தால், வரி சுமார் ரூ.3.52 லட்சமாகும். இவை விளக்கத்திற்கான கணக்குகள் மட்டுமே. காரின் அசல் விலைப்பட்டியல் மற்றும் முதல் பதிவு தேதியை வைத்து இறுதித் தொகையை ஆர்டிஓவில் உறுதிப்படுத்த வேண்டும். டெல்லியில் செலுத்திய சாலை வரியைத் திரும்பப் பெறுவதற்கான தகுதியையும் அங்குள்ள போக்குவரத்துத் துறையிடம் விசாரிக்க வேண்டும்.

எஞ்சின், பராமரிப்பு, மறுவிற்பனை

இப்போது நிறைய இன்னோவா க்ரிஸ்டா கார்களை வாங்குவதற்கு ஆர்வம் இருப்பதை காண முடிகிறது. அப்படி எந்த கார் வாங்குவதற்கு முன்பும், அந்த காரின் எஞ்சின், டர்போசார்ஜர், கியர்பாக்ஸ், கிளட்ச், சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றை கார் பற்றி நன்கு தெரிந்த நண்பர்கள் அல்லது மெக்கானிக்குகள் மூலம் பரிசோதிக்க வேண்டும். சர்வீஸ் பதிவுகள், ஓடிய தூரம், விபத்து வரலாறு மற்றும் வாகனம் டாக்ஸியாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். வணிகப் பயன்பாட்டில் இருந்த கார்களுக்கு வேறு வரி மற்றும் பதிவு நடைமுறைகள் இருக்கின்றன.

டெல்லியில் இருந்து வரும் இன்னோவா க்ரிஸ்டா காரை வாங்குவது சிலருக்கு விலை அடிப்படையில் கவர்ச்சிகரமாகவும், பொருளாதார ரீதியில் பயனுள்ளதாகவும் இருக்கலாம். ஆனால், தமிழக சாலை வரி, போக்குவரத்துத் துறையின் நடைமுறைகள், ஆவணங்கள் மற்றும் பழுதுபார்ப்பு செலவுகளைச் சேர்த்த பிறகும் கணிசமான சேமிப்பு இருக்க வேண்டும்.

குறைந்த விலை என்பதற்காக மட்டும் வாங்காமல், சட்டப்பூர்வ மறுபதிவு குறித்த உறுதி கிடைத்த பிறகு, சரியான ஆவணங்கள் மற்றும் காரின் நல்ல தர நிலை ஆகியவற்றை உறுதி செய்த பிறகே முடிவெடுப்பது நல்லது. ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றால், இரண்டு, மூன்று லட்சம் கூடுதலாக இருந்தாலும் தமிழக பதிவு எண் காரை வாங்குவது பலருக்கு சாலச் சிறந்ததாக இருக்கும்.