📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 09, 2026 04:04 PM

தாகூர் காடு இயற்கை வனப்பகுதி அல்ல: சீ ஹொங் டாட்

தாகூர் காடு இயற்கை வனப்பகுதி அல்ல: சீ ஹொங் டாட்

தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், தாகூர் காட்டை இயற்கை வனப்பகுதியாக அறிவிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று புதன்கிழமை (செப்டம்பர் 8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் தியோங், தாகூர் காடு போன்ற இயற்கை இடங்களை பாதுகாப்பது குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சீ அவ்வாறு பதிலளித்தார்.

லெண்டோர் வட்டாரத்தில் அமைந்துள்ள தாகூர் காட்டுப்பகுதி தற்போது குடியிருப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அரிய வகைக் குரங்குகள் போன்ற வனவிலங்குகள் வாழும் அக்காட்டைப் பாதுகாப்பது குறித்து ஆராய வேண்டும் என 2024ஆம் ஆண்டில் இயற்கை ஆர்வலர்களும், அறிவியலாளர்களும் பரிந்துரைத்திருந்தனர்.

அதற்கும் பதிலளிக்கும் விதமாக திரு சீ, “நிலப் பயன்பாடானது பல்லுயிர் மதிப்பு, மக்களின் வீட்டுத் தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது,” என்று கூறினார்.

“சிங்கப்பூரில் தற்போது நான்கு இயற்கை வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 2035ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் பசுமை வெளிகளை 7,800 ஹெக்டேரிலிருந்து 8,800 ஹெக்டேராக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“வீட்டுத் தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதால், பயன்பாட்டில் உள்ள நிலங்களை மேம்படுத்தவும், குறைந்த அடர்த்தி கொண்ட பகுதிகளில் பொது வீடுகளைக் கட்டவும் அரசாங்கம் முயற்சி செய்கிறது,”என்று அமைச்சர் சீ கூறினார்.

பழைய குடியிருப்புப் பேட்டைகளை மறுசீரமைக்கும் திட்டத்தின் மூலம் மட்டுமே ஒட்டுமொத்த வீட்டுத் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்துவிட முடியாது என்றும் அவர் விளக்கமளித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு, வருங்கால மேம்பாட்டுப் பணிகளும் சிறந்த முறையில் சமநிலைப்படுத்தப்படுகின்றன என்று அமைச்சர் சீ மேலும் தெரிவித்தார்.

புக்கிட் தீமா வனப்பகுதி, மத்திய நீர்ப்பிடிப்பு வனப்பகுதி ஆகியவை 1990ஆம் ஆண்டில் இயற்கை வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டன.

அதேபோல் லாப்ரடார் வனப்பகுதி, சுங்காய் பூலோ ஈரநிலப்பகுதி ஆகியவை இயற்கை வனப்பகுதியாக 2002ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டன.