தாராபுரத்தில் விஜய் பிரச்சாரத்தின்போது சத்யபாமா காதில் தெரிவித்தது என்ன?
சென்னை: தாராபுரம் பிரச்சாரத்தில் நான் நாடகம் நடத்தியதாக கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு. அரசியல் காரணத்துக்காக அடிப்படை ஆதாரம் இல்லாமல் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரத்தில் நேற்று முன்தினம் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சத்யபாமா பேசிக் கொண்டிருக்கையில் பின்னால் நின்று கொண்டிருந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு, ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதை பேசி முடித்ததும் சத்யபாமா அருகில் வந்த ராஜ்மோகன் காதில் எதையோ சொல்லிவிட்டு நகர்ந்து நின்றார். சில நொடிகளிலேயே சத்யபாமா அழத் தொடங்கினார். உடனே அருகில் நின்றிருந்த முதல்வர் சத்யபாமாவை தேற்றினார். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலானது.
இதையடுத்து, ‘அமைச்சர் ராஜ்மோகன் நாடகம் நடத்தினார்’ என திமுக, அதிமுக கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு அடையாறு பகுதியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: தாராபுரத்தில் நான் நாடகம் நடத்தியதாக கூறுவது மிகப் பெரிய வன்மம். கொளுத்தும் வெயிலில் முதல்வரும், மக்களும் வெகுநேரமாக காத்திருப்பதால் ஒருங்கிணைப்பாளர்கள் என்னை தொடர்புகொண்டு சத்யபாமாவை சீக்கிரமாக பேசி முடிக்கச் சொன்னார்கள்.
அதைத்தான் அவரிடம் ‘மேக் இட் பாஸ்ட்’ என்று சொன்னேன். என் மீது வைக்கப்படுவது அபாண்டமான குற்றச்சாட்டு. அரசியல் காரணத்துக்காக அடிப்படை ஆதாரம் இல்லாமல் இவ்வாறு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் வழக்கமாக நடைபெறுவதுதான்.
மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போன்றோரின் நிகழ்ச்சிகளிலும், திமுகவின் நூற்றாண்டு நிகழ்ச்சியிலும்கூட இதுபோன்று நடந்திருக்கிறது. சத்யபாமா வலியில் பேசினார். அரசியல் காரணத்துக்காக ஒரு பெண்ணின் கண்ணீரை தவறாக சித்தரிக்கிறார்கள். இதை ஒரு ஐடி விங் செய்தால் பரவாயில்லை. ஆனால், ஒரு தலைவர்இப்படி பேசலாமா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.