The Devil's Mouth Review: குணா குகையை விட மோசமான குகை.. ஒரே ஒரு ராட்சசன்.. டெவில்ஸ் மவுத் விமர்சனம்!
சென்னை: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கில் ஜூலை மாத இறுதியில் வெளியான டெவில்ஸ் மவுத் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து ஓடிடியில் பேயோட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. தியேட்டரில் பார்த்த தமிழ் படங்களே தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகி உங்களை கடுப்பேற்றுகிறதா? கொஞ்சம் வித்தியாசமான சர்வைவர் த்ரில்லர் படம் பார்க்க விரும்பினால் கட்டாயம் இந்த படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகையில் சென்று மாட்டிக் கொள்ளும் கதையை அதிரடியாக கலங்க வைக்கும் தொனியில் சர்வைவர் த்ரில்லர் படமாக கொடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வெற்றிப் பெற்றனர்.
இந்த படத்திலும் அப்படியொரு மர்மமான டெவில்ஸ் மவுத் என அழைக்கப்படும் குகைக்குள் சுற்றுலா செல்லும் ஒரு நண்பர்கள் கூட்டம் உயிருக்கு போராடும் சூழலும் கடைசியில் யார் தப்பித்தார் என்கிற சர்வைவர் த்ரில்லர் கதையாகவே உருவாகி உள்ளது.
டெவில்ஸ் மவுத் கதை: இயக்குநர் ஜெஃப் வேட்லோ இயக்கத்தில் கேத்ரின் நியூட்டன், லானா காண்டர், டாமி ரோஸ், கவின் கசாலெக்னோ, நிகோ ஹிராகா மற்றும் டேமே உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியான டெவில்ஸ் மவுத் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கில் வெளியாகி உள்ளது. தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் 3 பெண்கள், 2 ஆண்கள் அடங்கிய நண்பர்கள் கூட்டம் சாகச பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என டெவில்ஸ் மவுத் என அழைக்கப்படும் இடத்துக்கு வழிகாட்டிகளுடன் செல்கின்றனர்.
நீல நிற பாதையில் நீச்சல் அடித்துக் கொண்டே சாத்தானின் வாய் போன்ற குகைக்குள் சுற்றுலா செய்துவிட்டு வந்து விடலாம் என கைடு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த சாகச டூருக்கு அழைத்து வந்த மேக்ஸ் (லானா காண்டர்) அங்கே சிகப்பு நிற பாதை ஒன்று மேப்பில் இருக்கிறதே அதில் செல்லலாம் என அடம் பிடிக்கிறார். அது கொஞ்சம் ரிஸ்க் என எச்சரித்தும் கேட்காத அந்த குழுவை கைடு அதன் வழியாகவே அழைத்துச் செல்கிறார்.
படம் முழுக்கவே அண்டர்வாட்டரில் இந்த 5 பேரும் அவர்களுடன் வரும் 2 கைடுகளும் நீச்சல் அடித்த வாறே குகையை சுற்றிப் பார்க்க வேண்டும். ஸ்கெலட்டன் குகை என்கிற ஒரு இடம் பற்றி சொல்லும்போது, இதன் கீழே மனித எலும்புக் கூடுகள் இருக்கு பார்த்து ஜாக்கிரதையா வாங்க என கைடு சொல்லும் போது அல்லு விட்ரும்.
கிரிஸ்டல் க்ளியரான நல்ல நீரில் அந்த குகைக்குள் மறைந்திருக்கும் ஒரு ராட்சத சுறா மீன் என்ட்ரி கொடுத்து ஒவ்வொரு நண்பர்களாக வேட்டையாடி கொல்ல, கடைசியில் யாராவது தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் கதை.
பார்க்கலாமா? வேண்டாமா?: ஜாஸ் சீரிஸ், டீப் ப்ளூ சீ, தி மெக், ஓபன் வாட்டர், ரீஃப் என ஏகப்பட்ட சுறா மீன் படங்களை பார்த்து ரசித்த ரசிகர்களாக இருந்தாலும் சரி, சர்வைவர் த்ரில்லர் பிரியர்களாக இருந்தாலும் சரி கண்டிப்பாக இந்த படம் போரடிக்காமல் திக் திக் என கடைசி வரை வைத்திருக்கும். முதல் சீனிலேயே சாரா மெக்கன்னா (கேத்ரின் நியூட்டன்) நீச்சல் அடிக்கும் போது அவருடைய டீம் விட்டுச் சென்று விடும். திடீரென ஜெல்லி மீன்கள் அவரை சுற்றியதும் ஆள் காலி என நினைக்கும் காட்சியில் தொடங்கி கடைசியில் சாரா மெக்கன்னா தனது தோழி மேக்ஸை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் என ஏகப்பட்ட விஷயங்கள் அடி தூள் ரகம் தான்.
ஆபாச காட்சிகள் என்று பெரிதாக எதுவும் தமிழ் டப்பிங்கில் இல்லை. ஆனால், பிகினியில் படத்தில் நடித்துள்ள 3 நடிகைகளும் படம் முழுக்க கவர்ச்சி விருந்தையும் தர தவறாத நிலையில், குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்த்து விடலாம்.