தேர்தல் கமிஷனருக்கு எதிரான ஊழல் புகார்: மீண்டும் துாசு தட்ட கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம்: கேரள பொதுப்பணித் துறை செயலராக பதவி வகித்த காலத்தில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மீது எழுந்த ஊழல் புகார் குறித்து புதிதாக விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக மற்ற தேர்தல் கமிஷனர்களிடம் ஆலோசிக்காமல், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தனிச்சையாக முடிவெடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, இரு தேர்தல் கமிஷனர்கள், கேபினட் செயலருக்கு கடிதம் அனுப்பிய நிலையில், அது புகார் கடிதம் அல்ல; பணி மாற்றம் தொடர்பான கடிதம் என விளக்கம் அளிக்கப்பட்டது.
எனினும், இந்த சர்ச்சை காரணமாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவியில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எஸ்.ஐ.ஆர்.,க்கு பின் நடத்தப்பட்ட தேர்தல்களை சட்டவிரோதமானதாக அறிவிக்க வேண்டும் என காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் காங்கிரசை சேர்ந்த சதீசன் தலைமையில் ஆட்சி அமைத்துள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு, கடந்த 2006ல் ஞானேஷ் குமார் பொதுப் பணித்துறை செயலராக பதவி வகித்தபோது, அவருக்கு எதிராக எழுந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
மலையன்கீழு வேணுகோபால் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், மீண்டும் இந்த விவகாரத்தை துாசு தட்டுமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அறிவுறுத்தியுள்ளார். ஞானேஷ் குமார் பொதுப் பணித்துறை செயலராக பதவி வகித்தபோது, ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ் செயல்பட்ட இந்திய - மலேசிய கூட்டு நிறுவனமான 'பாட்டிபெல்' தலைமை திட்ட மேலாளராக இருந்த மலேசிய நாட்டின் லீ சீ பீன் தற்கொலை செய்து கொண்டதுடன் இந்த புகார் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
அவர் கடந்த 2006ல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தற்கொலை செய்து கொண்டார். லீ சீ பீன் எழுதியதாக கூறப்படும் தற்கொலை கடிதத்தில், பொதுப் பணித்துறை அதிகாரிகளின் ஊழல் மற்றும் தொல்லைகள் குறித்து குறிப்பிட்டிருந்ததாகவும், அதில், ஞானேஷ் குமாரின் பெயரும் இடம் பெற்றிருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காலக்கட்டத்தில் இந்த புகார் தொடர்பாக விசாரித்த லஞ்ச ஒழிப்புத் துறை, உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில், திடீரென விசாரணை முடித்து வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர்., குறித்த அரசியல் விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில், தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான இந்த புகாரை, 20 ஆண்டுகளுக்கு பின் கேரள அரசு மீண்டும் கையில் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரண்ட எதிர்க்கட்சிகள்தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி, மஹாராஷ்டிராவில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று பிரமாண்ட பேரணியை நடத்தின. தெற்கு மும்பையின் மெட்ரோ சினிமா என்ற இடத்தில் இருந்து, மும்பை மாநகராட்சி தலைமையகம் வரை நடந்த இந்த பேரணியில், உத்தவ் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'மஹாராஷ்டிராவில் நடந்த எஸ்.ஐ.ஆர்., நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்; தேர்தலில் மீண்டும் ஓட்டுச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.