தென் மாநில முதல்வர்கள் மாநாடு: அமித் ஷா மகிழ்ச்சி!
சென்னை: க டந்த வாரம் சென்னை வந்து தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்றார், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா. டில்லி திரும்பியதும் பிரதமர் மோடிக்கு போன் போட்டு, 'கூட்டம் நல்ல முறையில் நடந்தது. தென் மாநில முதல்வர்கள் அனைவரும் பாராட்டினர். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா இடையே உள்ள முக்கிய பிரச்னையே, நதி நீர் பங்கீடு தான். இதற்கான ஒரு திட்டத்தை அவர்களிடம் அளித்தேன். அனைவரும் அதை வரவேற்றனர்' என, மகிழ்ச்சியுடன் கூறினாராம்.
இந்த நதி நீர் பிரச்னைக்கு நதிகள் இணைப்பு தான் தீர்வு. இது தொடர்பான வரைவு அறிக்கையை, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தயாரித்திருந்தார். இதைத் தான் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா முதல்வர்களிடம் கொடுத்தாராம் அமித் ஷா. அவர் சென்னை வருவதற்கு முன்பாக, தமிழக முதல்வர் விஜய்க்கு, தமிழக எம்.பி., வாயிலாக ஒரு செய்தியை அனுப்பி உள்ளார். அவர் விஜயை சந்தித்து, அமித் ஷா கூறிய செய்தியை தெரிவித்துள்ளார்.
இதன் விளைவு, விஜய்க்கு தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் முக்கிய பங்கு அளிக்கப்பட்டது. அத்துடன், உலக வங்கியிடம் நிதி உதவி பெற்று, தென் மாநில நதிகளை இணைக்க திட்டம் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர முதல்வர்களிடம் இது குறித்து பேசி விட்டாராம் அமித் ஷா.
இந்த கூட்டம் நடந்து முடிந்த பின், அமித் ஷா துாதுவராக அனுப்பிய தமிழக எம்.பி.,யும் குஷியானாராம். நீர்வளத் துறை அமைச்சர் பாட்டீல், மோடிக்கும், அமித் ஷாவுக்கும் மிகவும் நெருக்கமானவர். குஜராத் பா.ஜ., தலைவராக இருந்தவர். மோடி, அமித் ஷா, பாட்டீல் என, மூன்று குஜராத்திகளும் ஒன்று சேர்ந்து, தென் மாநில நதி நீர் பிரச்னைக்கு தீர்வு கண்டால் நல்லது தான்.