தீ விபத்துகளின்போது வீட்டைவிட்டு வெளியேறுவதில் மூத்தோருக்குச் சிரமம்
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் ஏற்பட்ட நான்கு விபத்துகளை அடுத்து நடக்க சிரமப்படும் மூத்த குடிமக்களைப் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வெளியேற்றுவதில் உள்ள சவால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இவ்வாண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதிக்கும் இம்மாதம் 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நான்கு குடியிருப்பு வீடுகளில் தீப்பிடித்தது.
அந்த விபத்துகளில் பாதிக்கப்பட்ட அனைவரும் 65 வயதிலிருந்து 88 வயதுக்கு இடைப்பட்ட மூத்தோர். சம்பவத்தின்போது ஏறக்குறைய 220 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
வீடுகளைவிட்டு குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடைமுறை அக்கறைக்குரிய விவகாரம் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூகச் சேவை அமைப்புகளும் அதை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்கின்றனர்.
மூத்தோருக்குப் பராமரிப்புச் சேவைகளையும் ஆதரவையும் வழங்கும் லயன்ஸ் பிஃப்ரென்டர்ஸ் அமைப்பு, ஆபத்தை உணரும் திறன் மூத்தோரிடையே இருப்பது அவசியம் என்று சுட்டியது.
“மூத்தோரால் ஆபத்து நேரங்களில் உதவிக்கு அழைக்க முடிகிறதா அல்லது தாங்களாகவே தப்பித்து வெளியேற முடிகிறதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாத பட்சத்தில், அத்தகைய மூத்தோருக்கு உதவி தேவை என்பது அருகில் உள்ளவர்களுக்குத் தெரியுமா?” என்ற கேள்வியை முன்வைத்தார் அமைப்பின் தலைமை இயக்குநர் கேரன் வீ.
தனியாக வாழும் மூத்தோர், நடமாட முடியாதோர், பார்வை, செவிப்புலன் குறைபாடு உள்ளோர், தனியாக வாழ்வோர், நினைவாற்றல் குறைந்தோர் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மூத்தோர், குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை வழங்கும் ‘தாய் ஹுவா குவான்’ அறநிறுவன அமைப்பு, மூத்தோர் வாழும் சூழலில் இருக்கக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கவனிக்கும்படி ஊழியர்களையும் தொண்டூழியர்களையும் ஊக்குவிக்கிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“அதிகப்படியான குப்பைகளையும் பொருள்களையும் சேகரித்து வைத்தல், தப்பிக்கும் வழிகள் தடைபட்டிருப்பது, மின்சாரக் கருவிகள் பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தப்படுவது ஆகியவை அதில் அடங்கும்,” என்றார் அறநிறுவனத்தின் பேச்சாளர்.
ஆபத்துகளை விளைவிக்கக்கூடிய பொருள்கள் கண்டறியப்பட்டால் அறநிறுவன ஊழியர்கள் மூத்தோரிடம் பேசி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிப்பர்.
கூடுதல் நடவடிக்கை தேவைப்படும் மூத்தோர் சமூகச் சேவை ஊழியர்களிடமும் நிர்வாகிகளிடமும் பரிந்துரைக்கப்படுவர்.