📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 28, 2026 11:33 PM

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது ஏன்: கோர்ட்டில் போலீசார் விளக்கம்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது ஏன்: கோர்ட்டில் போலீசார் விளக்கம்

சென்னை:'கைது செய்வதற்கான காரணங்களில் திருப்தி அடைந்த பின்னரே, திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை போலீசார் கைது செய்தனர்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய, விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், அவதூறாக பேசியதாக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். அவரது ஜாமின் மனுவை, துாத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மார்க்கண்டேயன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, ''விசாரணைக்கு அழைத்து 'நோட்டீஸ்' அனுப்பாமல் நேரடியாக கைது செய்துள்ளனர். உச்ச நீதிமன்ற விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜாமின் வழங்க வேண்டும்.

குற்றம் புரிந்ததற்கான காரணம் இன்றி, மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக கைது உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், எதுவும் பேசவில்லை; உள் நோக்கத்துடன் பேசவில்லை. மனுதாரர் இரண்டு முறை சேர்மன், மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர். எதிர்க்கட்சி என்ற முறையிலேயே விமர்சனம் செய்தார்,'' என்றார்.

காவல் துறை தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ''சட்டசபை உறுப்பினரான அவர் பேசியது, சமூக வலை தளங்களில் பரவியது. கைது செய்வதற்கான காரணங்களில் திருப்தி அடைந்த பின்பே, போலீசார் கைது செய்தனர். கைதுக்கு முன் இரண்டு முறை தகவல் வழங்கப்பட்டு, அது 'வீடியோ' பதிவு செய்யப்பட்டது,'' என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.