📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema May 27, 2026 04:31 PM

"திரையரங்குகளில் சாமியாடுபவர்களுக்கு அன்போடு உதவுங்கள்!"

"திரையரங்குகளில் சாமியாடுபவர்களுக்கு அன்போடு உதவுங்கள்!"

"திரையரங்குகளில் சாமியாடுபவர்களுக்கு அன்போடு உதவுங்கள்!" - ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்போருக்கு, தெய்வ உத்வேகம் ஏற்பட்டால், அவர்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு வசூல் ரீதியாகப் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கடந்த வாரம் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதுபோல, படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின்போது சிலர் சாமியாடும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ஆர்.ஜே. பாலாஜி, "திரையரங்குகளுக்குச் சென்று 'கருப்பு' திரைப்படத்தைத் தங்களின் சொந்தப் படமாகக் கொண்டாடிய ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இத்திரைப்படத்திற்கு நீங்கள் காட்டியுள்ள அன்பு எங்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

நாங்கள் படம் எடுக்கத் தொடங்கியபோது கற்பனை செய்து பார்த்ததை விடவும் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதிலும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவாரம் செய்வதும், கண் கலங்குவதுமான செய்திகள் எங்களுக்கு வந்துகொண்டே இருக்கின்றன.

பல இடங்களில், சினிமா என்கிற எல்லையைத் தாண்டி ஒரு மிகப்பெரிய எமோஷனல் அனுபவத்தை மக்கள் உணர்வதாகக் கூறுகிறார்கள். சிலர் திரையரங்கிற்குள்ளேயே ஒரு தெய்வீக ஆற்றலை உணர்ந்திருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் திரைப்படத்திற்குக் கிடைத்த ஆகச்சிறந்த ஆசி இதுதான்.

இப்படிப்பட்ட உங்களின் அளவில்லா அன்போடு சேர்த்து, எங்களிடமிருந்து ஒரு சிறிய, அன்பான வேண்டுகோள். திரையரங்கில் படம் பார்க்கும்போது, உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் எவருக்காவது இதுபோன்ற தெய்வ ஆற்றல் ஏற்பட்டால், தயவுசெய்து அவர்களிடம் அன்போடு நடந்துகொள்ளுங்கள்.

அவர்களுக்குத் தேவையான இட வசதியை ஏற்படுத்தித் தந்து, குடிக்கத் தண்ணீர் கொடுத்து உதவுங்கள்.

திரையரங்கு ஊழியர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து, அவர்களைக் கண்ணியமான முறையில் கவனித்துக்கொள்ள உதவுங்கள். ஒரு அந்நியரிடமிருந்து கிடைக்கும் அந்தச் சிறிய இரக்க குணம்கூடப் புனிதமான ஒன்றுதான்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள எங்களின் திரையரங்கு உரிமையாளர்களிடம் நாங்கள் பணிவன்புடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இதுபோன்ற தருணங்களை எதிர்கொள்ள உங்கள் ஊழியர்களைத் தயார் நிலையிலும், கனிவோடும் வைத்திருங்கள்.

ஒவ்வொரு ஆன்மீகத் தருணத்தையும் அதற்குரிய மரியாதையுடன் கையாளுங்கள். 'கருப்பு' திரைப்படம் இப்போது பொதுமக்களுக்குச் சொந்தமாகிவிட்டது.

திரையரங்கிற்குள் நீங்கள் கொண்டு வந்த அந்த நம்பிக்கையும் பக்தியும்தான் இந்தத் திரைப்படத்தை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது. அந்த நம்பிக்கையை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, கண்ணியத்தோடு பாதுகாப்போம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.