திட்டத்தின் பெயரை மாற்றுவதால் ஸ்டாலினின் பெருமையை மறைக்க முடியாது
திட்டத்தின் பெயரை மாற்றுவதால் ஸ்டாலினின் பெருமையை மறைக்க முடியாது - ஆர்.எஸ்.பாரதி காட்டம்
தமிழ்நாட்டில் ஒரு அரசாங்கம் நடைபெறுவதற்கு எவ்வித அடையாளம் இல்லை என திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Published : July 31, 2026 at 9:51 PM IST
சென்னை: திட்டத்தின் பெயரை மாற்றுவதால் மு.க.ஸ்டாலினின் புகழை மறைத்துவிடலாம் என நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் எதுவும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தவெக அரசு வந்ததில் இருந்து உருப்படியாக ஏதும் செய்யவில்லை. எந்த திட்டமும் அவர்களிடம் இல்லை. ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இல்லாமல், குருட்டாம்போக்கில் ஆட்சிக்கு வந்துள்ளனர். அதனால் அவர்களிடம் ஆட்சியை நடத்துவதற்கான திட்டமில்லை. விபத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்த காரணத்தால், எதுவும் செய்ய முடியாமல் ஒவ்வொரு திட்டத்தின் பெயரை மாற்றி வருகிறார்கள். காலை உணவு திட்டத்தால் மு.க.ஸ்டாலின் பெயர் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. அந்த திட்டம் மற்ற நாடுகளில் கூட பின்பற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் அப்பாவை காணவில்லை என்று முதல்வர் சொன்னார். ஆனால் அப்பாவை ஒவ்வொரு திட்டத்திலும் மக்கள் காண்கிறார்கள். காலை உணவு உத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்துள்ளனர். எங்களுக்கு காமராஜர் மேல் எந்த விரோதமும் இல்லை. ஒரு திட்டத்தின் பெயரை மாற்றுவதால் அதனை கொண்டுவந்தவரை மறைத்துவிடலாம் என நினைத்தால் அதைவிட முட்டாள் தனம் இல்லை. ரோஜாவை என்ன பெயரிட்டாலும் அதன் புகழ் மாறாது என்பது போல மு.க.ஸ்டாலின் திட்டங்கள் ஒவ்வொன்றும் இன்றும் மக்கள் மனதில் நிற்கின்றது.
தாயுமானவர் திட்டம் எனும் பெயர் உன்னதமான பெயர். திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கவில்லை என்றாலும் மக்களுக்கு வேண்டியதை மு.க.ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்தார். தாய் உள்ளத்தோடு கொண்டு வந்த திட்டம் தாயுமானவர் திட்டம். தாய் தந்தையோடு இருக்கும், தாய் பாசம் தெரிந்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். இது தெரியாமல் திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளனர். மக்கள் இதனை பார்த்துக்கொண்டு உள்ளனர். எந்த பெயரை மாற்றினாலும் மு.க.ஸ்டாலின் எனும் பெயரை தான் மக்கள் சொல்வார்கள்" என் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி தொடர்பாக பேசிய அவர், "திமுகவில் தீவிரமாக பணியாற்றி கொங்கு மண்டலத்தில் திமுக செல்வாக்கை செந்தில் பாலாஜி அதிகபடுத்தியுள்ளார். அவரை பழிவாங்கும் நோக்கத்தில், அச்சுறுத்த அவர் மீது வழக்கு போட்டுள்ளனர். வழக்கு போடுவது ஒருநாள் செய்தி. முடிவு எப்படி வரும் என எங்களுக்கு தெரியும். காவல்துறைக்கு வேறு வேலை இல்லை. ஒரு அரசாங்கம் நடைபெறுவதற்கு அடையாளம் இல்லை" என்றார்.
மின் கட்டண விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "மின் கட்டணம் உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் பதில் சொல்லாமல் பொறுப்பின்றி அமைச்சர் நிர்மல்குமார் ஓடுகிறார். மின் வாரியம் கூடுதலாக கட்டணம் விதித்து வசூலித்து விடுகின்றனர். பின் அதனை அடுத்தடுத்த தவணைகளில் கழித்து கொள்கின்றனர். இது ஒரு மோசடி. மக்களிடம் இருந்து மறைமுகமாக செய்யப்படும் திருட்டு இது. மக்களிடம் இருந்து பணத்தை திருடி மின்வாரியத்தை நடத்துகின்றனர். மக்கள் பணத்தை வைத்திருந்தால் அதற்கு வட்டி கொடுக்க வேண்டும்" என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.