📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 18, 2026 10:02 PM

தமிழ் இலக்கியத்தைப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் கவியரசர் கண்ணதாசன்: எழுத்தாளர் தேவிபாலா புகழாரம்

தமிழ் இலக்கியத்தைப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் கவியரசர் கண்ணதாசன்: எழுத்தாளர் தேவிபாலா புகழாரம்

மதுரை, ஆக. 18–தமிழ் சங்க இலக்கியங்களை எல்லா மக்களும் எளிதில் புரிந்துகொள் ளும்படியான வார்த்தைகளாக மாற்றி, பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் கண்ணதாசன் என்று பிரபல எழுத்தாளர் தேவிபாலா புகழாரம் சூட்டியுள்ளார்.தேனியில் உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கத்தின் தேனி கிளை சார்பில் 16-வது ஆண்டு விழா நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்குக் கிளைத் தலைவர் எஸ். மாரியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் முத்து விஜயன் வரவேற்றுப் பேசினார்.நிகழ்வின் தொடக்கமாகப் பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்ற நிறுவனர் ராஜரத்தினத்தின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் ‘நம் உரத்த சிந்தனை’ தேனி சிறப்பிதழ் மற்றும் கவிஞர் ரா.வே. இளங்கோவன் எழுதிய ‘கவியரசு கண்ணதாசன் பாடல்களில் இலக்கியச் சுவை’ என்ற நூல் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் தேவிபாலா நூலின் முதல் பிரதியை வெளியிட, “மதுரையின் அட்சய பாத்திரம்” டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு மற்றும் நாடார் சரஸ்வதி கல்விக் குழுமங்களின் தலைவர் ஏ.எஸ்.வி. தர்மராஜன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.வழிகாட்டுதல் பாடல்கள்:விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு எழுத்தாளர் தேவிபாலா பேசுகையில், “கண்ணதாசன் பாடல்கள் எல்லா காலத்திற்கும் ஏற்றவை. நம் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழிகாட்டுதலோடு அவரது பாடல்கள் அமைந்தன. காதல், தத்துவம், வாழ்வியல், கணவன்-மனைவி உறவு மற்றும் குடும்ப உறவு என அவர் பேசாத விஷயங்களே இல்லை. அதனால்தான் அவர் ‘கவியரசு’ எனப் போற்றப்படுகிறார். சங்க இலக்கியங்களில் இல்லாத விஷயங்களே இல்லை.அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, திருக்குறள் ஆகியவற்றைப் படித்தாலே நமக்கு வாழ்க்கைத் தெளிவு கிடைத்துவிடும். ஆனால், எல்லோராலும் அதைப் படிக்க இயலாத சூழலில், அதை எளிமைப்படுத்திப் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்களாக இயற்றித் தந்தவர் கவியரசர் கண்ணதாசன். ஆங்கில இலக்கியப் பாணியையும் தமிழின் தன்டிமைக்கு ஏற்ப அவர் மாற்றித் தந்தார். ‘யூ டு புரூட்டஸ்?’ என்ற ஆங்கிலத்தில் பிரபலமான வாக்கியத்தை ‘கண்ணா நீயுமா?’ என நம் மொழிக்கு ஏற்ப மாற்றித் தந்தவர் அவர். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த ஒரு பொக்கிஷம் கண்ணதாசன்” என்று குறிப்பிட்டார்.கவியரங்கம், கருத்தரங்கம் மற்றும் பேச்சரங்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் உதயம்ராம், கவிஞர் செந்தில்குமார், எழுத்தாளர் கூடலூர் மு. ஆதவன் உட்பட ஏராளமான எழுத்தாளர்கள், வாசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக எழுத்தாளர்கள் கருணைச்சாமி, இளங்கோவன், ரங்கசாமி மற்றும் கணேசன் ஆகியோருக்குச் சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.