📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 02, 2026 04:30 AM

தமிழ் முரசு கவிதைப் பயிலரங்கு: இளையோரின் ஆர்வம்

தமிழ் முரசு கவிதைப் பயிலரங்கு: இளையோரின் ஆர்வம்

‘உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பும் எவராலும் முயன்றால் கவிதை எழுத முடியும்’.

‘நல்ல கவிதைகளைப் படிப்பதன்மூலம் கவிதை எழுதுவதற்கான ஆற்றலை வளர்த்துக்கொள்ள முடியும்’.

இவை தமிழ் முரசு ஜூலை 18ஆம் தேதி எஸ்பிஎச் மீடியா வளாகத்தில் நடத்திய ‘நீங்களும் கவிஞராகலாம்’ பயிலரங்கில் கலந்துகொண்ட ஒருசிலரின் கருத்துகள். இளங்கவிஞர்களை அல்லது கவிஞர்களாக விரும்புவோரை ஈர்த்து, அவர்களுடன் கவிதை எழுதுவதில் உள்ள சில நுணுக்கங்களைப் பகிர்ந்துகொள்வது பயிலரங்கின் நோக்கமாக இருந்தது.

‘உள்ளத்து உள்ளது கவிதை, இன்பம் உருவெடுப்பது கவிதை, தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்து உரைப்பது கவிதை’ என்பார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கவிதை என்றால் என்ன என்பதற்குரிய எத்தனையோ விளக்கங்களில் இது முக்கியமான ஒன்று.

ஒவ்வொரு காலகட்டத்தில் உள்ளோருக்கு ஏற்ப கவிதையும் புதுப்புது வடிவம் எடுக்கிறது. அதுபற்றி இளையர்களின் கருத்துகளையும் அவர்கள் கவிதையின்பால் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் அறிய விரும்பியது தமிழ் முரசு. அதன் விளைவாக உருவானதே இந்தப் பயிலரங்கு.

தமிழ் முரசின் மூத்த நிர்வாக உதவி ஆசிரியர் சபா. முத்து நடராஜனும் செய்தியாளர் வி‌‌ஷ்ருதா நந்தகுமாரும் கவிதைப் பயிலரங்கை வழிநடத்தினர். பல்கலைக்கழக மாணவர்களும் உயர்நிலைப் பள்ளி மேல்நிலை மாணவர்களும் அதில் கலந்துகொண்டனர். மூன்று மணி நேரம் நீடித்த பயிலரங்கில் பல்வேறு அங்கங்கள் இடம்பெற்றன. பங்கேற்பாளர்கள் அனைவரும் முனைப்புடன் பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். சில தலைப்புகளில் கவிதை எழுதவும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இறுதியில் அவர்களின் படைப்புகள் பற்றிய விவாதமும் இடம்பெற்றது.

பயிலரங்கிற்குப் பிறகு, கவிதைகள் பற்றியும் அவற்றின் தாக்கம் பற்றியும் பேசுவதற்கு எஸ்பிஎச் மீடியா வளாகத்தில் தமிழ் முரசு புதன்கிழமை (ஜூலை 29) கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பயிலரங்கை வழிநடத்தியோருடன் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை இறுதியாண்டு மாணவி யோ‌ஷிதா குமரனும் தகவல் தொழில்நுட்பத் துறை இறுதியாண்டு மாணவி ரோ‌ஷிணி கலியமூர்த்தியும் பங்கெடுத்தனர்.

கலந்துரையாடலின் முழுமையான காணொளியை இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பயிலரங்கில் பங்கெடுத்த கவிஞர்கள் சிலரின் கவிதைகள் இன்றைய கவிதைப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. புதியவர்களின் கன்னி முயற்சிகளைப் பார்க்க, பக்கம் ___.