தமிழக அரசின் கடன் ரூ.11 லட்சம் கோடி... நல்லதா, கெட்டதா... எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?
தமிழக அரசின் கடன் ரூ.11 லட்சம் கோடி... நல்லதா, கெட்டதா... எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?
ஒரு மாநில அரசு தனது வருவாயைவிட அதிகமான செலவுகளை மேற்கொள்ள வேண்டிய சூழல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.
த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர், மாநிலத்தின் நிதித்துறை செயலாளர் எம்.ஏ.சித்திக் அரசின் நிதி நிலை மற்றும் புதிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் விரிவான விளக்கங்களை அளித்தார்.
அப்போது, தமிழக அரசின் மொத்த நிலுவைக் கடன் சுமார் ரூ.11 லட்சம் கோடியை எட்டியிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை ஜி.எஸ்.டி.பி (GSDP) மதிப்பில் சுமார் 3 சதவிகிதமாகவும், நடப்பு ஆண்டு ரூ.1.22 லட்சம் கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், கடன் வாங்குவது இன்னும் 50 ஆண்டு களானாலும் குறையாது என்றும் அவர் தெரிவித்தது பரவலாக கவனிக்கப்பட்டது.
மாநில அரசின் கடன் என்பது ஒரு குடும்பக் கடன் போல அல்ல; அது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வரி வருவாய், மக்கள் நலச் செலவுகள், உள்க ட்டமைப்பு முதலீடுகள் மற்றும் வட்டி செலவுகள் ஆகியவற்றோடு தொடர்புடைய ஒரு நீண்டகால நிதி அமைப்பு.
தற்போதைய நிலை என்ன?
தமிழகத்தின் மொத்த நிலுவைக் கடன் சுமார் ரூ.11 லட்சம் கோடி அளவை (ரூ.10.98 லட்சம் கோடி) எட்டியுள்ளது, ஒரே ஆண்டில் ஏற்பட்டதல்ல. பல ஆண்டுகளாக பல்வேறு அரசுகள் மேற்கொண்ட கடன் பெறுதல்கள், அவற்றின் வட்டி செலவுகள், நலத்திட்டங்கள், ஊதியச் செலவுகள், ஓய்வூதியம் மற்றும் வளர்ச்சித் திட்ட முதலீடுகள் ஆகியவற்றின் சேர்க்கையாக உருவான நிலை. மேலும், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் சுமார் ரூ.2,54,575 கோடியாக இருந்தாலும், அந்த வருவாயில் ஒரு பெரிய பகுதி வட்டி செலுத்துவதற்கும், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கும் செலவாகிறது.
மாநிலங்கள் ஏன் கடன் வாங்குகின்றன?
கடன் அதிகரிக்க முக்கியக் காரணங்கள்!
இலவச அல்லது மானிய அடிப்படையிலான திட்டங்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பெண்கள், மாணவர்கள், முதியோர் மற்றும் பிற நலத் திட்டங்களுக்கு அரசு ஆண்டுதோறும் மிகப்பெரிய தொகையைச் செலவிடுகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அரசின் நிரந்தரச் செலவுகளில் முக்கியமான பங்கை வகிக்கிறது.
மின்வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் போன்ற நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும்போது, அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்த அரசே நிதி உதவி வழங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
முன்னர் வாங்கிய கடன்களுக்கு ஆண்டுதோறும் வட்டி செலுத்த வேண்டியுள்ளது. புதிய கடன் வாங்காமல் இருந்தாலும், பழைய கடன்களின் வட்டி செலவு அரசின் நிதிச் சுமையை அதிகரிக்கிறது.
கடனை முழுமையாகக் குறைக்க முடியுமா?
நடைமுறையில் பார்த்தால், ஒரு மாநிலத்தின் மொத்தக் கடன் முழுமையாக பூஜ்யமாகும் நிலை மிகவும் அரிது. காரணம், பழைய கடன்களை திருப்பிச் செலுத்தும் போதும், புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு மீண்டும் கடன் பெற வேண்டிய அவசியம் ஏற்படலாம். அதனால், கடன் தொகை குறைவது மட்டுமல்ல, மாநில பொருளாதாரத்தின் அளவுடன் ஒப்பிடும்போது கடன் சுமை குறைவதே முக்கியம்.
உதாரணமாக, மாநில உற்பத்தி மதிப்பு வேகமாக அதிகரித்தால், ரூ.11 லட்சம் கோடி கடனே இருந்தாலும் அதன் சுமை ஒப்பீட்டளவில் குறைந்து காணப்படும். மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த கடன் மீண்டும் வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அரசின் கடன்களை குறைக்க வழிகள்!
வரி விகிதத்தை உயர்த்துவது மட்டும் தீர்வு அல்ல. வரி ஏய்ப்பை குறைத்தல், டிஜிட்டல் வசூல் முறைகளை விரிவு படுத்துதல், வணிக நடவடிக்கைகளை பதிவு செய்ய ஊக்குவித்தல் மற்றும் சேவைத் துறையின் வரி பங்களிப்பை உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் வருவாயை அதிகரிக்க உதவும்.
புதிய தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மின்னணு உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வாகனத் தொழில் போன்ற துறைகளில் முதலீடுகள் அதிகரித்தால், வேலைவாய்ப்பு உருவாகும். அதன் மூலம் வருமான வரி பகிர்வு, வணிக வரிகள், முத்திரைக் கட்டணம், மின்சார பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அரசின் வருவாய் அதிகரிக்கும்.
சாலை, துறைமுகம், ரயில் இணைப்பு, தொழிற்பேட்டை, நீர் மேலாண்மை, கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு போன்ற முதலீடுகள் நீண்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும். இத்தகைய முதலீடுகள் கடனை வருமானம் உருவாக்கும் சொத்தாக மாற்றும்.
அரசுத் துறைகளில் மீண்டும் மீண்டும் நடைபெறும் செலவுகள், பயன்பாடில்லாத திட்டங்கள், காலியாக உள்ள கட்டடங்கள், செயலற்ற நிறுவனங்கள் போன்றவற்றை மதிப்பாய்வு செய்து செலவைக் குறைக்கலாம்.
மின்வாரியம் மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் போன்ற நிறுவனங்களில் நிர்வாக சீர்திருத்தம், தொழில்நுட்ப மேம்பாடு, இழப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள், கட்டண அமைப்பு மறுசீரமைப்பு போன்றவை அரசின் நிதிச் சுமையை குறைக்க உதவும்.
அதிக வட்டி கொண்ட பழைய கடன்களைக் குறைந்த வட்டி கொண்ட நீண்டகால கடன்களால் மாற்றுதல், கடன் காலக்கெடுவை சரியாக நிர்வகித்தல் மற்றும் பணப்புழக்கத்தை திட்டமிடுதல் மூலம் வட்டி சுமையைப் படிப்படியாகக் குறைக்க முடியும்.
தனிநபர் கடன் சுமை என்ன சொல்கிறது?
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நபரின் மீது கணக்கிடப்படும் கடன் சுமை சுமார் ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளது. இது ஒவ்வொரு குடிமகனும் அந்தத் தொகையை அரசுக்கு நேரடியாக செலுத்த வேண்டும் என்பதல்ல. இந்த எண்ணிக்கை மாநிலத்தின் மொத்த நிலுவைக் கடனை மக்கள் தொகையால் வகுத்து, கணக்கிடப்படும் ஒரு குறியீடு. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் தொகை ரூ.67,087-லிருந்து ரூ.1,28,934 ஆக உயர்ந்திருப்பது, மாநிலக் கடன் வேகமாக அதிகரித்திருப்பதை வெளிப் படுத்துகிறது.
மக்களுக்கு இதன் தாக்கம்?
மாநிலக் கடன் அதிகரிப்பது உடனடியாக ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் பாதிக்காது. ஆனால், நீண்ட காலத்தில் நிதிச் சுமை அதிகமாக இருந்தால், புதிய வளர்ச்சித் திட்டங்கள் தாமதமாகலாம். சில மானியங்கள் அல்லது நலத் திட்டங்களில் மாற்றங்கள் வரலாம். வரி உயர்த்தும் அழுத்தம் உருவாகலாம். அரசின் முதலீட்டு திறன் குறையலாம்.
அதே நேரத்தில், கடனை உற்பத்தித் திறன் உயர்த்தும் திட்டங்களுக்கு பயன்படுத்தி பொருளாதாரம் வேகமாக வளர்ந்தால், வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கவும் முடியும்.
எனவே, தமிழகத்தின் நிதி எதிர்காலத்தை நிர்ணயிப்பது கடன் தொகையின் அளவு மட்டும் அல்ல. அதன் சுமை மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்காத அளவில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமான பொருளாதார நோக்கம்.