📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 11, 2026 07:03 AM

தமிழக அரசு, திமுக தொடர்ந்த மனுக்கள் ஏற்பு; காவிரி நீர் பங்கீடு வழக்கு: 13ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு, திமுக தொடர்ந்த மனுக்கள் ஏற்பு; காவிரி நீர் பங்கீடு வழக்கு: 13ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு, திமுக தொடர்ந்த மனுக்கள் ஏற்பு; காவிரி நீர் பங்கீடு வழக்கு: 13ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வரும் 13ம் தேதி அவசர வழக்காக விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54வது அவசர கூட்டத்தில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைப்படி அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை செயல்படுத்தாமல் கர்நாடக அரசு நீர் திறக்க மறுத்து இழுத்தடிப்பு செய்து வருகிறது.

இதையடுத்து, தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் கடந்த 1ம் தேதியும், தமிழ்நாடு அரசு சார்பில் 3ம் தேதியும் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், வரும் 12ம் தேதிக்குள் 4.536 டி.எம்.சி தண்ணீரை பிலிகுண்டுலுவிற்கு திறந்து விடவும், ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரையிலான காலத்தில் ஏற்பட்ட 26.954 டி.எம்.சி நீர் பற்றாக்குறையை கர்நாடகா வழங்கிடவும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்‌ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் உமாபதி ஆகியோர் முறையீடு செய்தனர்.

அப்போது, ‘காவிரி ஆணைய உத்தரவை மீறி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பதால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே எங்களது மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், காவிரி நீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் வரும் 13ம் தேதி அவசர வழக்காக விசாரிக்கப்படும் என உத்தரவிட்டனர். இந்த சூழலில் காவிரி ஒழுங்காற்றுகுழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.