தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பா? சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 4-ந்தேதி அறிவிக்கப்பட்டன. அதில், த.வெ.க. கட்சி வெற்றி பெற்று கூட்டணி அரசை அமைத்துள்ளது. தொடர்ந்து, சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது.
த.வெ.க. கூட்டணி அரசில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளன. இந்த நிலையில் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நேற்று கூடி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
த.வெ.க. ஆட்சியில், சட்டசபையின் முதல் கூட்டம் கூட்டப்பட உள்ளது. இதுகுறித்து தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, தமிழ்நாடு சட்டசபை பேரவையின் கூட்டம் வரும் 18-ந்தேதி காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடும். அன்று கவர்னர் உரை நிகழ்த்துவார். அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு, சட்டசபையின் அலுவல் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். அலுவல் ஆய்வுக்குழு கூடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
வந்தே மாதரம், தேசிய கீதம் குறித்த மரபுகள், ஏற்கனவே உள்ளது போல்தான் இருக்குமா? அதில் ஏதும் மாற்றம் உள்ளதா? என்று கேட்டால், சட்டமன்றத்தில் கவர்னர் உரை நிகழும்போது என்ன நடக்கிறது? என்பதை நீங்களே காணலாம்.
சட்டமன்ற நிகழ்வுகள்
அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் காலகட்டத்தில் சட்டசபையின் நடவடிக்கைகளை மக்கள் நேரலையில் பார்த்தனர். சட்டமன்ற நிகழ்வுகளை அதிகமாக பார்ப்பதற்கு மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அரசியலுடன் நேரடியாக தொடர்பில்லாத இளம் வயதினர் கூட மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதை நேரலையில் பார்க்க விரும்புகின்றனர். அதுபற்றி உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம் என அவர் கூறினார்.