📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 20, 2026 11:03 PM

‘தமிழக மக்கள் கழகம்‘ புது கட்சியை தொடங்கிய ரசிகர்கள்,, பொதுச்செயலாளராக அஜித்துக்கு அழைப்பு!

‘தமிழக மக்கள் கழகம்‘ புது கட்சியை தொடங்கிய ரசிகர்கள்,, பொதுச்செயலாளராக அஜித்துக்கு அழைப்பு!

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, இரண்டே ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார். இதன் காரணமாக சினிமாவில் இருக்கும் பல நடிகர்களுக்கும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கும் நிலையில், நடிகர் அஜித்தின் ரசிகர்கள் புதிய கட்சியை தொடங்கி உள்ளனர்.

நடிகர் தனுஷ்: அண்மையில் தனுஷின் 'அகில இந்திய தனுஷ் தலைமை ரசிகர் நற்பணி மன்ற' கூட்டத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை நிற பின்னணியில் தனுஷ் இரு கரங்களை கூப்பி வணக்கம் செலுத்துவது போன்ற தோற்றத்துடன் கூடிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இது வழக்கமான ரசிகர் மன்ற கொடி போல இல்லாமல், அரசியல் கட்சி போல இருந்ததால் தனுஷ் விரைவில் கட்சி தொடங்க போகிறார் என் பேச்சு பரவியது. அதை உறுதிப்படுத்துவது போல பிறந்த நாள் விழாவில் தனுஷ் பேசி இருந்தார். சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், தனுஷின் இந்த நடவடிக்கை தற்போதைய சூழலில் பேசுபொருளானது.

புது கட்சி: இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்பேட்டையில் அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து 'தமிழக மக்கள் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளனர். இந்த புதிய கட்சியின் பொது செயலாளர் பதவியை ஏற்குமாறு நடிகர் அஜித்குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சி கொடி மஞ்சள், வெள்ளை, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கொடியின் நடுவில் இரண்டு சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன.

அஜித்திற்கு அழைப்பு: மதச்சார்பற்ற மக்கள் பணி, சாதி மற்றும் சமய வேறுபாடுகளற்ற சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கட்சியாக இந்த கட்சி செயல்படும். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள் அரசியல் கட்சியை தொடங்கியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் தொடங்கியுள்ள இந்த அரசியல் கட்சியை நடிகர் அஜித்குமார் விரும்புவாரா? என்ற கேள்வியும் இணையத்தில் பலரால் எழுப்பப்பட்டு வருகிறது.