📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 15, 2026 06:33 AM

தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகள் திறப்பு; 10 இடங்களுக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி

தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகள் திறப்பு; 10 இடங்களுக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி

சென்னை: தமிழகத்தில், 10 மணல் குவாரிகளை திறப்பதற்கு, சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தி.மு.க., ஆட்சியில், மாநிலம் முழுதும் 36 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டன. அவற்றை நடத்தும் பொறுப்பு, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

நீர்வளத் துறையின் இணையதளத்தில் முன்பதிவு செய்த பொது மக்களுக்கு மணல் வழங்கப்படவில்லை. குறைந்த விலைக்கு மண் அள்ளி, நான்கு முதல் ஐந்து மடங்கு விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இதில் முறைகேடு, சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது. இதையடுத்து, அமலாக்கத் துறை வாயிலாக குவாரிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, கலெக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில், 'ரெய்டு' நடத்தப்பட்டது.

இதையடுத்து, 2023ம் ஆண்டு மணல் குவாரிகளை, தி.மு.க., அரசு மூடியது. த.வெ.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், அரசுக்கு வருவாயை பெருக்க, மணல் குவாரிகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, கடலுார், திருச்சி, அரியலுார், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், உள்ளிட்ட, 10 இடங்களில் குவாரிகளை திறப்பதற்கு, சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகளை சுற்றுச்சூழல் துறை விதித்துள்ளதால், அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, நீர்வளத் துறையின் குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் கண்காணிப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குவாரிகளை நேரடியாக நீர்வளத்துறை இயக்க வேண்டும். 'ஆன்லைன்' வாயிலாகவே மணல் விற்பனை செய்ய வேண்டும். மணல் அள்ளுவதற்கு இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என, பல்வேறு கெடுபிடிகளை, சுற்றுச் சூழல் துறை விதித்துள்ளது.

ஒவ்வொரு குவாரிக்கும், 12 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே, அதற்கேற்ப, எந்த புகாருக்கும் இடமின்றி, குவாரிகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள், நீர்வளத் துறையில் தொடங்கி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் அரசின் முடிவுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்டாவில் திறக்க எதிர்ப்பு! தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிக்கை: காவிரி டெல்டாவில், ஆறுகளில் மணல் குவாரிகள் அமைக்க, குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தை, தமிழக அரசு அணுகியுள்ளதாக தகவல் வருகிறது. டெல்டாவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. பல இடங்களில் கடல்நீர் ஊடுருவல் ஏற்பட்டுள்ளது. மணல் குவாரிகளை திறந்தால், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு செல்லும். பாசனம், குடிநீருக்கு பிரச்னை ஏற்படும். எனவே, டெல்டா மாவட்டங்களில் குவாரிகள் அமைக்கும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.