📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 24, 2026 03:04 AM

தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும்

தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும்

தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் - முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வுக் காண வேண்டுமென்று மின்சார வாரிய அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Published : September 23, 2026 at 9:07 PM IST

சென்னை: தமிழ்நாட்டை மின்துறையில் தன்னிறைவுப் பெற்ற மாநிலமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று மின்வாரிய அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திற்கு இன்று (செப்.23) வருகை தந்த முதலமைச்சர் விஜய், மின் விநியோகம் மற்றும் மின் கட்டுப்பாடு தொடர்பான முக்கிய மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வுச் செய்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டின் தற்போதைய மின் தேவை மற்றும் மின் உற்பத்தி நிலவரம், புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத எரிசக்தி ஆதாரங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு, மின் தேவை மற்றும் மின் கிடைப்புத் திறனுக்கிடையேயான இடைவெளி, தொடர்ந்து அதிகரித்து வரும் மின் தேவையின் வளர்ச்சி ஆகியவை குறித்து ஆய்வின்போது தமிழ்நாடு முதலமைச்சரிடம் மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

முதலமைச்சரிடம் எடுத்துரைத்த அதிகாரிகள்

மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் அதிகரித்து வரும் மின் தேவையின் தாக்கம், மின்சாரப் பரிமாற்றச் சந்தையில் இருந்து தேவையான அளவு மின்சாரத்தைப் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள், நிலக்கரி கிடைப்பதில் ஏற்படும் சவால்கள், அதிக செலவினம் ஏற்படுத்தும் எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி, மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் எதிர்பாராத மின் உற்பத்தித் தடைகள் உள்ளிட்ட மின் கிடைப்பில் ஏற்படும் சவால்கள் குறித்தும் இந்த ஆய்வின்போது முதலமைச்சர் விஜய்யிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், 2027- ஆம் ஆண்டு கோடை காலத்தில் ஏற்படக்கூடிய மின் தேவையை முன்கூட்டியே கணித்து, அதனைப் பூர்த்திசெய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான விரிவான செயல் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாநிலத்தின் மின் விநியோக அமைப்பில் நிலவும் முக்கிய சவால்களான பழமையான மின் கட்டமைப்புகள் மற்றும் உபகரணங்கள், முக்கிய மின் தடைகள் மற்றும் பழுதுகள், அதிகரித்துவரும் மின் சுமையால் ஏற்படும் வலையமைப்பு நெரிசல், மின் விநியோகத் தரத்தைப் பாதிக்கும் காரணிகள், மழை, புயல், காற்று உள்ளிட்ட இயற்கைக் காரணிகளால் ஏற்படும் மின் தடைகள், களப்பணியாளர்களின் பற்றாக்குறைப் போன்றவை குறித்தும் விரிவாக முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.

எதிர்கால செயல் திட்டங்கள்

சென்னை மாநகரில் மின்விநியோகம் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின்பளு பகிர்வு மையத்தை (State Load Despatch Centre SLDC) பார்வையிட்டு, மாநிலம் முழுவதும் மின் உற்பத்தி, மின் கொள்முதல், மின் தேவை மற்றும் மின் விநியோகத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்து, மின் சுமையைச் சமநிலைப்படுத்தும் பணிகள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும், சென்னை மின் விநியோகக் கண்காணிப்புக் கட்டுப்பாடு மற்றும் தரவு சேகரிப்பு மையத்தை (Chennai Distribution Supervisory Control and Data Acquisition SCADA Control Centre) முதலமைச்சர் பார்வையிட்டபோது, சென்னை மாநகரில் மின் விநியோக நிலவரத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்தல், மின் சுமை மேலாண்மை, மின் தடங்கல்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட SCADA மையத்தின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விளக்கமளித்தனர்.

நுகர்வோர் சேவை மையத்தில் ஆய்வு

அதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களைப் பெறுவதற்கும், அவற்றை உரிய அலுவலர்களிடம் உடனடியாகத் தெரிவித்துத் தீர்வுக் காண்பதற்கும் 24 மணி நேரமும் செயல்பட்டுவரும் மின்னகம் (Minnagam) நுகர்வோர் சேவை மையத்தையும் முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். மின்னகத்தில் பெறப்படும் அழைப்புகள், அவற்றின் பதிவு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்புதல், புகார்களின் நிலையைக் கண்காணித்தல் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முதலமைச்சருக்கு விளக்கினர்.

மின்சார வாரிய அலுவலர்களுக்கு உத்தரவு

பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும், மின்தடை, சீரற்ற மின்னழுத்தம், பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து புகார்கள் பெறப்படும் நிலையில் அவற்றை விரைந்து சீரமைக்க வேண்டுமென்றும், மின்சார விபத்துகளைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்றும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுக் காண வேண்டுமென்றும் முதலமைச்சர், மின்சார வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ஒன்றிய அரசின் மானியத்துடன், தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 3 கிலோவாட் வரை ரூ.1 லட்சம் வரையிலான கூடுதல் மானியத் திட்டத்தைப் பயன்படுத்தி, பொதுமக்கள் அதிக எண்ணிக்கையிலான வீடுகளில் மேற்கூரை சூரிய மின் அமைப்புகளை (Roof top Solar) நிறுவிப் பயன்பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும், மின் சேமிப்பு மற்றும் மின் தேவையைச் சீராக நிர்வகிக்க BESS (Battery Energy Storage System) அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் கொள்கையை விரைவாக அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மின்துறையில் தன்னிறைவுப் பெற்ற மாநிலமாக உருவாக்க நடவடிக்கை

புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தில் பயன்படுத்தவும், தமிழ்நாடு முழுவதும் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தரவு சேகரிப்பு (SCADA) அமைப்பை விரிவுபடுத்தி மின் விநியோகத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்து, தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். மேலும், நடைபெற்றுவரும் மின் உற்பத்தித் திட்டங்களை உரிய காலக்கெடுவில் நிறைவேற்றுவதுடன், சொந்த மின் உற்பத்தித் திறனை அதிகரித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின் சேமிப்பு, நவீன தொழில்நுட்பம், வலுவான மின் பரிமாற்றம் மற்றும் விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டை மின்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்றும் மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.