தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு
தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு - அமைச்சர் மரிய வில்சன்
முதல்வர் ஒவ்வொரு துறை அதிகாரிகளுடனும் பட்ஜெட் தொடர்பாக விரிவான ஆலோசனைகளை நடத்தி வருவதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
Published : July 22, 2026 at 7:11 PM IST
சென்னை: தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்பதே தவெக அரசின் நிலைப்பாடு என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
வடசென்னை ஆர்.கே. நகர், வ.உ.சி. நகர் பகுதிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், அப்பகுதி மக்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு நிதி அமைச்சருமான மரிய வில்சன் நேரில் பார்வையிட்டார். பின்னர், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற்ற பொதுமக்களுக்கு அவற்றுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சன், "இது முதல்கட்டமாக இந்தப் பகுதியில் நடத்தப்படும் முகாம், அடுத்தடுத்த கட்டங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மேலும் பல முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.
மீனவர்கள் கைது தொடர்பான் கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆந்திர மாநில கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை ஆந்திர கடற்கரை போலீசார் கைது செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார் வருகிறது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஆந்திரா சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். ஆந்திர அரசு முன்வைத்துள்ள சில கோரிக்கைகள் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்" எனத் தெரிவித்தார்.
வரவிருக்கும் பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என்ற கேள்விக்கு, "ஆகஸ்ட் மாதம் வரை காத்திருங்கள். பட்ஜெட்டில் அனைத்தும் சிறப்பாக இருக்கும். முதல்வர் ஒவ்வொரு துறை அதிகாரிகளுடனும் ஏழு மணி நேரம் வரை பட்ஜெட் தொடர்பாக விரிவான ஆலோசனைகளை நடத்தி வருகிறார்" என்றார்.
தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருவது தொடர்பான கேள்விக்கு, "அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமே கேட்க வேண்டும்" என்றார்.
எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முதல்வரை விமர்சிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "திராவிட மாடல் அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருப்பது இதுதான். அவர்களுடைய வளர்ப்பு சரியில்லை. முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசி வருகின்றனர். அவர்கள் இவ்வாறு தொடர்ந்து பேசுவது நல்லதல்ல. இதுபோன்ற பேச்சுகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமே இதை விட்டுவிடுவோம். வரவிருக்கும் தேர்தல்களில் மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்" என்றார்.
நீட் தேர்வு தொடர்பாக பேசிய அவர், "தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு" என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.