தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக்கூடாது: கர்நாடகாவில் வெடித்தது போராட்டம், இந்தியா செய்திகள்
பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு 15 நாள்களுக்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்துவிட வேண்டும் என வெளியிடப்பட்ட உத்தரவு கர்நாடக மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் அந்த உத்தரவைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மேலும், அந்த உத்தரவைக் கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
காவிரிப் படுகையில் உள்ள மைசூரு, மாண்டியாவில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கேஆர்எஸ் அணை அமைந்துள்ள மாண்டியாவில் விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மரண தண்டனைக்கு நிகரானது என்று அவர்கள் தெரிவித்தனர்.
எக்காரணம் கொண்டும் காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்றும் மாநில விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மைசூரு மாவட்டத்திலும் விவசாயச் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாநில அரசு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக முழக்கங்ளை எழுப்பினர். மாவட்டம் முழுவதும் மைசூரு, நஞ்சன்கூடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் வழங்குவதற்கு எதிராக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) முழுஅடைப்பு நடக்க உள்ள நிலையில், கர்நாடகத்தில் மீண்டும் காவிரி நீர்ப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.