தங்க விலை உயர்வு: ஹோர்முஸ் நீரிணை ஒப்பந்தத்தின் தாக்கம்
தங்க விலை ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான அறிகுறிகள் தென்படுவது அதற்குக் காரணம்.
எரிபொருள் விலையின் நெருக்குதலால் வட்டி விகிதத்தை உயர்த்தவேண்டிய கட்டாயத்திற்கு மத்திய வங்கி தள்ளப்படுவது வழக்கம். இப்போது அது தணிந்துள்ளது.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) காலை மணி 9.57க்கு ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரு விழுக்காடு அதிகரித்து 4,347.90 அமெரிக்க டாலராக விற்பனையானது. அதற்கு முன்னர், தங்க விலை 4.1 விழுக்காடு கூடியிருந்தது. பிப்ரவரி 3ஆம் தேதிக்குப் பிறகு இதுவே ஆக அதிக உயர்வு.
முக்கியமான அனைத்துலக நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை மூலமாகக் கப்பல் போக்குவரத்திற்கான பாதை குறித்து ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது அந்நீர்வழி மூலம் மீண்டும் சில எரிபொருள் விநியோகங்கள் தொடங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. வாரத்தின் முதல் மூன்று அமர்வுகளில் 11 விழுக்காட்டுச் சரிவைக் கண்ட பிறகு, ப்ரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்குக் கிட்டத்தட்ட 79 அமெரிக்க டாலராகவும் வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட் ஏறக்குறைய 75 அமெரிக்க டாலராகவும் வர்த்தகமாயின.
தங்கமும் வட்டி விகிதங்களும் வழக்கமாக எதிரெதிர்த் திசைகளில் நகரக்கூடியவை. தங்கத்திற்கு வட்டி அல்லது ஈவுத்தொகை எதுவும் கிடைக்காது. அதனால் பத்திரங்கள், சேமிப்புக் கணக்குகள் போன்ற வட்டிதரும் சொத்துகளின் மீதான ஆர்வத்தைக் குறைவான வட்டி விகிதங்கள் குறைக்கின்றன; இது தங்கத்திற்கான தேவையை அதிகரிக்கிறது.
குறைந்த வட்டி விகிதம் அமெரிக்க டாலரின் மதிப்பையும் பலவீனப்படுத்தும் போக்கைக் கொண்டுள்ளது. இது டாலரில் வர்த்தகமாகும் தங்கத்தை அனைத்துலக அளவில் வாங்குவோருக்குக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்து, அதன் விலையை மட்டுப்படுத்துகிறது.
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க-ஈரான் போர் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 20 விழுக்காடு சரிந்துள்ளது.