தங்கவயல் ஜிம்கானா மைதானத்துக்கு மறுவாழ்வு இந்திய விளையாட்டு குழும அதிகாரிகள் ஆய்வு
தங்கவயல்: ''தங்கவயலில் ஜிம்கானா விளையாட்டு மைதானம் போல, மேலும் மூன்று விளையாட்டு மைதானங்கள் புதுப்பிக்கப்படும்,'' என, இந்திய விளையாட்டு குழுமத்தின் தலைமை அதிகாரி பிரசாத் தெரிவித்தார்.
தங்கவயல் உரிகம் பகுதியில் உள்ள ஜிம்கானா மைதானம் மூடப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. செடிகள், மரங்கள், முட்புதர்கள் வளர்ந்து காடாக காட்சி அளித்தது.
தொடர்ந்து, 20 நாட்களாக ஜே.சி.பி., இயந்திரம் மூலம் செடிகள், மரங்களை அகற்றும் பணிகள் நடந்தன.
இந்நிலையில், நேற்று பகலில் கோலார், ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபுவுடன் டில்லியில் இருந்து, மத்திய அரசின் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா எனும் இந்திய விளையாட்டு குழுமத்தின் தலைமை அதிகாரி பிரசாத் தலைமையில் ஒரு குழுவினர், ஜிம்கானா மைதானத்தை நேற்று ஆய்வு செய்தனர்.
அதிகாரி பிரசாத் கூறுகையில், ''தங்கவயல், தங்கத்துக்கு மட்டுமே சிறந்த இடம் இல்லை. கல்வி, விளையாட்டு துறைகளிலுமே சிறந்த இடமாகும். இங்குள்ள இளைஞர்கள் பலரும் விளையாட்டில் தன்னார்வம் உள்ளவர்கள்.
''ஜிம்கானா மைதானத்தில் விளையாடியவர்களே தேசிய, சர்வதேச அளவில், விளையாட்டில் சிறந்து விளங்கியவர்கள். தங்கவயலில் ஜிம்கானா மைதானம் மட்டுமின்றி, ஹாக்கி மைதானம், பாம்பே கிரிக்கெட் கிரவுண்ட், கோல்ப் கிரவுண்ட் ஆகியவையும் புதுப்பிக்கப்படும்,'' என்றார்.
எம்.பி., மல்லேஸ்பாபு கூறுகையில், ''இம்மாதம் 29ம் தேதி, ஜிம்கானா மைதானத்தில் போதைப் பொருள் தடுப்புக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கால்பந்து போட்டியை, தங்கவயல் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் ஏற்பாடு செய்துள்ளார். இந்த மைதானத்தில் விளையாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கும்,'' என்றார்.
தங்கச் சுரங்க பாதுகாப்புத்துறை அதிகாரி அமீத் சர்மா உட்பட பலர் பங்கேற்றனர்.