தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி முறைகேடு; முன்னாள் அமைச்சர் மகேஷ் உதவியாளருக்கு போலீசார் சம்மன்
சென்னை: தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் உதவியாளருக்கு, சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.கடந்த ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தருதல் உள்ளிட்ட பணிகளுக்கு, 100 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக, தி.மு.க.,வின் செய்தி தொடர்பு குழு துணை தலைவர் அரசகுமார், 58, உட்பட, மூவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.இம்மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, தி.மு.க., ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த மகேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அவரது முன்னாள் உதவியாளர் அருண் பிரகாஷ் என்பவரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.இந்நிலையில், மகேஷின் முன்னாள் உதவியாளரான, திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வாளாடி கார்த்திக் என்பவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது. அதில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டு இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.