தொகுதி மறுவரையறை மசோதாவை ஸ்டாலின் எதிர்க்க வேண்டும்; சொல்கிறார் ராகுல்
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை, இண்டி கூட்டணியினர் சந்தித்து பேசினர். அதன்பிறகு, ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியதாவது; தொகுதி மறுவரையறை மசோதா தென் மாநிலங்களை பாதிக்கும். நாடு முழுதும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும் அதிக விளைவுகளை உண்டாக்கும். லோக்சபாவின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்தினால் உருவாகும் முக்கிய பிரச்னைகள் குறித்து ஸ்டாலினிடம் எடுத்துரைத்தோம்.
இந்த மசோதா இந்திய அரசியலமைப்பை மாற்றியமைக்கும். இந்தத் திட்டத்தை அவர்கள் ஏற்கனவே அசாம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் சோதனை செய்து பார்த்துவிட்டார்கள். இப்போது அதனை இந்தியா முழுதும் அமல்படுத்த முடிவு செய்து விட்டார்கள். ஆர்எஸ்எஸ் தமிழுக்கு எதிரான அமைப்பு. தமிழ் கலாசாரம், தமிழ் மொழிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
தமிழகத்தை பாதுகாக்குமாறும், பாஜவின் இந்தத் திட்டம் நிறைவேறாமல் தடுப்பதை உறுதி செய்யுமாறும் சகோதரர் ஸ்டாலினிடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். தமிழ் கலாசாரம், தமிழ் மொழி மீதான தாக்குதல் அதிகரிக்கும். எனவே, சகோதரர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.