தொகுதி மறுவரையறையை ஆதரிப்போர் தமிழ்நாட்டின் துரோகிகள்: ராகுல் காந்தி
மாமல்லபுரம்: மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் துடிக்கும் தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, மாநிலத்தின் அரசியல் அதிகாரத்தைக் களைய பாஜக மேற்கொண்டிருக்கும் ஒரு சதி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்டது குறித்த பரபரப்பு நிலவி வரும் நிலையில் அவர் அந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
“இந்த நடைமுறை தமிழ்நாட்டைப் பலவீனப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வட்டார மற்றும் தேசிய அளவிலான அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும்,” என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
கடந்த பத்து நாள்களுக்கு மேல் மாமல்லபுரத்தில் நடைபெற்று தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவுநாளில் பங்கேற்க ராகுல் காந்தி சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக மேற்கொள்ளும் தொகுதி மறுவரையறை முயற்சி தமிழக மக்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க உருவாக்கப்பட்ட ஒன்று. அதனை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வோராகக் கருதப்படுவர்.
“தமிழகத்தின் எதிர்காலத்திற்கு அவர்கள் துரோகம் செய்கிறார்கள். அத்துடன், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தமிழக மக்களையும் அதன் எதிர்காலத்தையும் சீர்குலைக்க அனுமதிக்கிறார்கள்,” என்றார்.
மேலும், மசோதாவை ஆதரிப்போரை தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்குத் துரோகம் செய்யும் ‘21ஆம் நூற்றாண்டு எட்டப்பன்கள்’ என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
வரலாற்றுப் பாத்திரமான ‘எட்டப்பன்’ என்பது தமிழ்க் கலாசாரத்தில் துரோகத்தின் சின்னமாக காலம் காலமாகக் கருதப்பட்டு வருகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அதனை துரோகிகளுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி கடுமையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எந்தவொரு தமிழரும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக் கூடாது என்றும் தொகுதி மறுவரையறையை அவர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, சனிக்கிழமை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்த ராகுல் காந்திக்கு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.