📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 17, 2026 10:34 PM

“தவெக ஆட்சிக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்த திட்டமிட்ட கருத்துத் திணிப்பு”

“தவெக ஆட்சிக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்த திட்டமிட்ட கருத்துத் திணிப்பு”

மதுரை: “குறிப்பிட்ட சமூகத்தில் 9 பேருக்கு அமைச்சரவையில் முதல்வர் விஜய் வாய்ப்பு கொடுத்ததாக சமூக ஊடங்களில் கருத்து பரப்புகின்றனர். இதன் மூலம் பிற சமுதாய மக்களிடம், தவெக ஆட்சி, அரசுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக திட்டமிட்டு கருத்துகள் திணிக்கப்படுகிறது” என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, உளுந்தூர் பேட்டையில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு ஆகஸ்டு 17-ம் தேதி நடக்கிறது. இதற்காக மண்டல வாரியாக விசிக நிர்வாகிகளின் கூட்டம் நடக்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மண்டல செயற்குழு கூட்டம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. மாநாட்டுக்கான நிதி பெறும் நிகழ்ச்சியில் விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் வழங்கிய நிதியை தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.

அதன்பின் அவர் பேசியது: “இந்த மாநாடு தேர்தலுக்கு முன்பே நடத்த திட்டமிட்டு இருந்தோம். தேர்தல், புதிய நிர்வாகிகள் நியமனம் போன்ற பணியால் தள்ளிப்போனது. தேர்தலில் நாம் எதிர்பார்த்தது போன்று நமது கூட்டணி வெற்றி பெறாத நிலையில், தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. விசிகவின் இடைவிடாத தீவிர களப்பணியால் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது மகிழ்ச்சி.

பல்வேறு தலைப்புகளில் ஏராளமான மாநாடுகளை தொடர்ந்து நடத்தி இருக்கிறோம். இந்த மாநாட்டு செலவுகளை எதிர்கொள்ள மண்டல செயற்குழு மூலம் நிதி திரட்டுக்கிறோம். மதுரையில் முதல் தவணையாக ரூ.17.33 லட்சம் வழங்கியுள்ளனர். எவ்வித எதிர்பார்ப்பு இன்றி ஓவியர், கட்டிட தொழிலாளி போன்ற இயக்க தோழர்கள் வழங்கும் நிதியால் நமது இயக்கம் தொடர்ந்து வலிமை பெறுகிறது.

பொருளாதார வலிமையுள்ளவர்கள் நம்மிடம் இல்லை. சொந்தக் கையை ஊன்றி வளர்கிறோம். நமது இயக்கம் பிற மாநிலத்துக்கும் பரவி இருந்தாலும், மதுரைதான் ஆணிவேர். விசிக ஏழை, விளிம்பு நிலை, தொழிலாளர்கள் கட்சி. தேர்தல் என்பது பதவிக்கானது அல்ல. நாம் உயிர்ப்புடன் இருக்க, முன்னெடுக்கும் கொள்கை கோட்பாடு, போராட்டங்களே காரணம்.

என்னிடம் சீட்டுக்காக வந்தவர்கள் யாருமில்லை. என்னைப் புரிந்தவர்கள் என்னுடன் பயணிக்கின்றனர். 1991 மதுரையில் விசிக தொடங்கிய முதல் தமிழ் தேசியத்தை உச்சரித்து கொண்டிருக்கிறோம். நமது தமிழ் தேசிய கொள்கையை பார்த்து மற்றவர்கள் பின்பற்றுகின்றனர். இந்தக் கொள்கையை பின்பற்றுவதில் அந்தந்த கட்சி தலைமைக்கேற்ப மாறுபாடு இருக்கும்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வந்து ஆட்சிக்கு வரலாம். சாதாரண மக்களை அரசியல்படுத்தினால் மட்டும் மாற்றம் வரும். விசிக அதை தொடர்ந்து செய்கிறது. இதன்மூலம் விசிகவில் எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், துணை மேயர், ஒன்றிய தலைவர், கவுன்சிலராகி உள்ளோம். திடீர் தலைவரெல்லாம் தோன்றி குற்றம் போன்ற செயல்களை தடுக்க முடியாது. தெலுங்கருக்கு எதிரானவர்கள் தமிழர்கள் என மாற்றி உள்ளனர்.

மத்திய அரசுக்கு நாம் அடிமையல்ல. மாநில சுயாட்சி வேண்டி போராடுகிறோம். சாதியை வேரறுக்கவேண்டும். தமிழர்கள் ஒருங்கிணைக்க விடாமல் சாதிகள் தடுக்கின்றன. பிற கட்சியில் இருந்து விலகுவோர் விசிகவில் கட்சியில் சேருவதில்லை. நாம் தமிழர், தேமுதகவில் கட்சியில் இருந்து விலகுவோர் கூட அதிமுக, திமுகவுக்கு செல்கின்றனர். அதற்காக அவர்களை நாங்கள் அழைக்கிறோம் என்பதல்ல. அரசியல் புரிதலுக்காக சொல்கிறேன்.

மோடி வித்தை தெரிந்தவர் என்றாலும், தமிழகத்தில் இந்தியை திணிக்க முடியாததால் பாஜகவின் சனாதன அரசியல் எடுபடவில்லை. சாதிய, மதவாதிகள் விசிகவை தனிப்படுத்த துடிக்கின்றனர். இவரை சேர்த்தால் கூட்டணி மற்றும் கட்சிக்கு சிக்கல் வரும் என கருதுகின்றனர். 10 சீட் கொடுத்தால் ஓபிசி-க்கு எதிராக திரும்பிவிடுவார் எனப் பேசுகின்றனர்.

தற்போது தவெக அமைச்சரவையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த 8 பேருக்கு அமைச்சர்கள், ஒருவருக்கு துணை சபாநாயகர் பதவி என 9 பேருக்கு விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளதாக சமூக ஊடங்களில் கருத்து பரப்புகின்றனர். இதன் மூலம் பிற சமுதாய மக்களிடம், இந்த ஆட்சி, அரசுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக திட்டமிட்டு கருத்துகள் திணிக்கப்படுகிறது.

திமுக, அதிமுக ஆட்சியில் மக்கள் தொகையில் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என கேள்வி கேட்க வேண்டும். தவெகவில் குறிப்பிட்ட சமூகத்துக்கு 8 பேருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. 6 பேருக்குதான் கொடுத்துள்ளனர். விசிகவிலும், காங்கிரஸிலும் நாங்கள் தேர்வு செய்து கொடுத்த நபர்கள் எஸ்சி-க்கள் என்பதால் இருவரும் தவெக கணக்கில் வராது.

தவெக குறிப்பிட்ட சாதிக்கான கட்சியா, முக்கியத்துவம் தருகிறதா, திருமாவளவனுக்கு அங்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. திருமாவளவன் சொல்லி ஒரு அதிகாரிக்கு பதவி வழங்கப்படுகிறது. அவர் சொன்னால் தவெக அரசு கேட்கிறது என்றெல்லாம் சொல்வது கட்டுக்கதை. நான் சொல்லி ஒரு போலீஸ் அதிகாரிக்கு பதவி கொடுத்தால் அவரை ஏன் எடுத்தார்கள்? அதற்கு யாரும் விளக்கம் தரவில்லை.

20 ஆண்டுகள் திமுகவில் தொடர்ந்து பயணித்துள்ளோம். அங்கே பெரிதாக நாங்கள் எதுவும் சாதிக்கவில்லை. இந்த ஆட்சி அமைந்து ஒன்றரை மாதம் ஆகிறது. அதற்குள் பெரிய பதவிகளை நாங்கள் தீர்மானிக்க முடியுமா?.

தவெக அரசுக்கு எதிராக கருத்துவாக்கம் செய்கின்றனர். 25 ஆண்டுகள் தேர்தல் களத்தில் வெற்றி கரமாக இயங்குகிறோம். இதுபோன்ற சூழலில்தான் இம்மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறோம்” என்று திருமாவளவன் பேசினார்.