📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 28, 2026 02:34 AM

தவெக: 'பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளில் முறைகேடு?'

தவெக: 'பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளில் முறைகேடு?'

தவெக: 'பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளில் முறைகேடு?' - அண்ணாமலையின் குற்றச்சாட்டு என்ன?

"கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்குப் பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும்" - அண்ணாமலை.

தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளின் தரம் மற்றும் கொள்முதல் முறைகேடுகள் குறித்து, பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ரூ.5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ரூ.3.70 என்று விலை குறைந்தபோது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, குறைந்த விலைக்குப் பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூரக் கிராமப்புறப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்லப்படும்போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.

கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்குப் பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்னை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும்.

எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.