“தயவுசெய்து இந்திய அணியை அனுப்புங்க.. எங்க நாடு ரொம்ப பாதுகாப்பானது”.. கெஞ்சும் வங்கதேசம்
“தயவுசெய்து இந்திய அணியை அனுப்புங்க.. எங்க நாடு ரொம்ப பாதுகாப்பானது”.. கெஞ்சும் வங்கதேசம்
தாகா: இந்திய அணி வரும் செப்டம்பர் மாதம் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், பிசிசிஐ இன்னும் உறுதியான முடிவை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தமீம் இக்பால் தங்கள் நாடு மிகவும் பாதுகாப்பானது எனவும், இந்தியா நிச்சயம் வர வேண்டும் என கெஞ்சும் நிலைக்கு சென்று பேசி இருக்கிறார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் செப்டம்பரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில மாதங்கள் முன்பு நடந்த அரசியல் உரசல்களால் இந்த தொடர் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.
முன்னதாக, முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசின் போது பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியாவில் நடந்த டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க வங்கதேச அணி மறுத்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புடன் சேர்ந்து உலகக்கோப்பை தொடரில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்த முயற்சித்தது. அந்த விவகாரம் இந்திய அரசையும் சீண்டிப் பார்ப்பதாக இருந்தது. அதனால் இரு நாட்டு கிரிக்கெட் உறவில் விரிசல் ஏற்பட்டது.
பின்னர் வங்கதேசத்தில் தேர்தல் நடத்தப்பட்டு ஆட்சி மாற்றம் நடந்தது. சமீபத்தில் வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானை இந்தியாவில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் மாநாட்டிற்கு இந்திய அரசு அழைத்துள்ளதால், கிரிக்கெட் தொடர் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என முந்தைய வங்கதேச அரசு சொன்ன நிலையில், இப்போது தங்கள் நாடு பாதுகாப்பானதுதான் அதை காரணம் காட்டி இந்திய அணி வராமல் இருக்கக் கூடாது என தற்போதைய வங்கதேச கிரிக்கெட் தலைவர் கெஞ்சி இருக்கிறார்.
இது குறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் தமீம் இக்பால், "இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போதைக்கு இல்லை. எனினும், இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் (பிசிசிஐ) தொடர்ந்து மின்னஞ்சல் மூலமாகப் பேசி வருகிறோம். இந்தியா - வங்கதேசம் மோதும் தொடர் என்றால் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், வீரர்கள் என அனைவரிடமும் உற்சாகம் அதிகமாக இருக்கும்.
வங்கதேசம் மிகவும் பாதுகாப்பான நாடு. இந்திய அணி இங்கு வரும் என்று நான் பெரிதும் நம்புகிறேன். எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், சில முடிவுகள் என் கட்டுப்பாட்டில் இல்லை. மிக விரைவில் இந்த தொடர் நடக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும்" என்றார்.
மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) பிரான்சைஸ் லீக் கமிட்டியின் தலைவராகத் தான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்துப் பேசிய தமீம் இக்பால், "இந்த நியமனம் எனக்கும் வங்கதேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. உலகளவில் பல்வேறு நாடுகளில் தொடங்கும் டி20 லீக் போட்டிகளைக் கண்காணிப்பது, அவற்றுக்கு அனுமதி வழங்குவது மற்றும் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வது போன்ற முக்கியப் பணிகளை இந்தக் கமிட்டி மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.