உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்தவர் பல்லவி சிங் ராஜ்புத். இவர் செல்போனில் டேட்டிங் செயலி மூலம் பல ஆண்களிடமிருந்து பணத்தைப் பறித்து விட்டதாகக் கூறி வழக்கறிஞர் ஒருவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் வழக்கு தொடுத்தார்.
சமூக வலைதளங்கள் மற்றும் டேட்டிங் செயலி மூலம் நட்பு ஏற்படுத்திக் கொண்டு ஆண் நண்பர்களுக்கு தனது அந்தரங்கமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பல்லவி சிங் அனுப்புவார். பின்னர் நேரில் சந்தித்து அந்த ஆண் நண்பருடன் அந்தரங்கமான முறையில் படங்களை எடுப்பார். பின்னர் அந்த புகைப்படங்களை வைத்து அவர் பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பார் என்று வழக்கறிஞர் தனது வழக்கில் புகார் கூறியிருந்தார்.
பல ஆண் நண்பர்களிடம் பழகி அவர் இதுவரை ரூ.6 கோடிக்கும் மேல் சுருட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது.
போலீஸ் நடத்திய விசாரணையில் பல்லவி சிங், பொய்யான புகார்களைக் கொடுத்து 5 பேரை சிறையில் தள்ளியிருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள பல்லவி சிங் ராஜ்புத், அவரது 2 பெண் உதவியாளர்கள், ஒரு ஆண் உதவியாளர் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.