📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 22, 2026 11:33 PM

உக்ரைன்: குழந்தைகள் மற்றும் மனிதாபிமான கட்டமைப்புகளைப் பாதுகாக்க மீண்டும் வலியுறுத்தும் யுனிசெஃப்!

உக்ரைன்: குழந்தைகள் மற்றும் மனிதாபிமான கட்டமைப்புகளைப் பாதுகாக்க மீண்டும் வலியுறுத்தும் யுனிசெஃப்!

உக்ரைன்: குழந்தைகள் மற்றும் மனிதாபிமான கட்டமைப்புகளைப் பாதுகாக்க மீண்டும் வலியுறுத்தும் யுனிசெஃப்!

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

கடந்த வாரம் உக்ரைன் முழுவதும் இடம்பெற்ற தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், மற்றும் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கவலை தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனம் குழந்தைகள் மற்றும் மனிதாபிமான கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜூலை 19, ஞாயிறன்று, இரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் பிலோஹோரோட்காவில் (Bilohorodka) உள்ள யுனிசெஃப் ஒப்பந்தத்தின் கீழ் செயல்பட்டு வந்த ஒரு நிவாரணப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கு கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்தக் கிடங்கில், மின் உற்பத்தி சாதனங்கள், குடிநீர், நலவாழ்வுப் பொருள்கள் மற்றும் தண்ணீர் சேமிப்புத் தொட்டிகள் உள்பட ஏறத்தாழ 39 இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான 1,06,000-க்கும் மேற்பட்ட மனிதாபிமான உதவிப் பொருட்கள் இருந்தன.

இந்த அத்தியாவசியப் பொருட்கள், போர் முனைகளில் வாழும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், வரவிருக்கும் குளிர்காலத்திற்கு அவர்களைத் தயார்படுத்தவும் வைக்கப்பட்டிருந்தன.

கீவ் (Kyiv) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள், குண்டுவெடிப்புகள், உயிரிழப்புகள் மற்றும் குடியிருப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட மற்றொரு தீவிரமான இரவு நேரத் தாக்குதலின் போது இச்சம்பவம் இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு யுனிசெஃப் மற்றும் அதன் கூட்டாளி அமைப்புகள் அவசர மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு 2026- ஜூன் மாதத்தில்தான் அதிக அளவிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள யுனிசெஃப் நிறுவனம், இதில் ஏழு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 116 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான உதவிப் பொருட்கள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் உதவிப் பணியாளர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதைத் தடுக்கின்றன என்று யுனிசெஃப் எச்சரித்துள்ளது.

அனைத்துத் தரப்பினரும் வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், குழந்தைகள் மற்றும் மனிதாபிமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும், உக்ரைன் குழந்தைகளுக்காக நிரந்தர அமைதியை நோக்கிச் செயல்படவும் யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.