உலகக்கோப்பை ஜெயிக்கணும்னா அன்று ஜவகல் ஸ்ரீநாத்துக்காக கங்குலி செய்ததை இன்று சுப்மன் கில் செய்யணும்
உலகக்கோப்பை ஜெயிக்கணும்னா அன்று ஜவகல் ஸ்ரீநாத்துக்காக கங்குலி செய்ததை இன்று சுப்மன் கில் செய்யணும்
மும்பை: இந்திய ஒருநாள் அணியில் தற்போது நிலவும் சூழலில், மூத்த வீரரான முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சவுரவ் கங்குலி எடுத்த துணிச்சலான முடிவைப் போல, தற்போதைய கேப்டன் சுப்மன் கில்லும் செயல்பட்டால் மட்டுமே ஷமியின் உலகக்கோப்பை கனவு நனவாகும் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கடந்த 2003-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் ஓய்வு பெற முடிவு செய்திருந்தார். தேர்வுக்குழுவினரும் அவரைத் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அன்றைய கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலி, ஸ்ரீநாத்தின் அனுபவத்தை உணர்ந்து அவரை மீண்டும் அணியில் சேர்த்தார்.
கங்குலியின் அந்த துணிச்சலான முடிவு வீண் போகவில்லை. அந்த உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேற ஸ்ரீநாத் முக்கியக் காரணமாக இருந்தார். தற்போது அதே போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் முகமது ஷமியும் இருக்கிறார்.
வரும் 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. அங்குள்ள வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில், முகமது ஷமியின் துல்லியமான பந்துவீச்சு எதிரணிகளுக்கு சவாலாக இருக்கும். வரும் செப்டம்பர் மாதத்துடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் முடிய உள்ளதாகக் கூறப்படும் நிலையில், புதிய தேர்வுக்குழுவிடம் கேப்டன் சுப்மன் கில் தனது திட்டத்தில் முகமது ஷமியின் பெயரை முன்வைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஒரு சிறந்த கேப்டனாக வளர வேண்டுமென்றால், கங்குலியைப் போல தேர்வுக்குழுவிடம் தனது விருப்பத்தை வலுவாக முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் சுப்மன் கில் இருக்கிறார். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் வெறும் இளம் வீரர்களை மட்டுமே நம்பியிருக்காமல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி போன்ற அனுபவ வீரர்களின் கூட்டணி இந்தியாவிற்குத் தேவை. சுப்மன் கில் இந்த தைரியமான முடிவை எடுத்தால், 2027 உலகக்கோப்பையில் ஷமி மீண்டும் இந்திய அணியில் களமிறங்க முடியும்.