📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 14, 2026 09:05 AM

"உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மோசமாக ஆடியதால் ரசிகர்கள் தீ வைத்தனர்".. ரோஹித் சர்மா வேதனை

"உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மோசமாக ஆடியதால் ரசிகர்கள் தீ வைத்தனர்".. ரோஹித் சர்மா வேதனை

"உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மோசமாக ஆடியதால் ரசிகர்கள் தீ வைத்தனர்".. ரோஹித் சர்மா வேதனை

மும்பை: தான் கிரிக்கெட் பேட்டைக் கையில் எடுக்கக் காரணமாக அமைந்த அந்த வரலாற்றுப் போட்டி எது என்பது குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா உருக்கமாகப் பேசியுள்ளார். கடந்த 1996-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பிற்குச் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் பாட்டில்களை வீசி எறிந்ததுடன், கேலரி இருக்கைகளுக்கு தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இந்திய பேட்டர் வினோத் காம்ப்ளி மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

இந்தச் சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசிய ரோஹித் சர்மா, "1996 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெற்ற போது எனக்கு வெறும் 9 வயது. அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த விதம் பெரும் சர்ச்சையானது. ரசிகர்கள் மைதானத்தில் பொருட்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டு வினோத் காம்ப்ளி அழுதுகொண்டே பெவிலியன் திரும்பினார்.

தொலைக்காட்சியில் அந்த காட்சியைப் பார்த்த அந்த தருணமே எனக்குள் கிரிக்கெட் கனவு உருவானது. எப்படியாவது இந்தியாவுக்காக விளையாடி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் அந்த 9 வயதிலேயே எனக்குள் பிறந்துவிட்டது. அன்றிலிருந்துதான் நான் தீவிரமாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். பின்னர் மும்பை போரிவலி பகுதியில் நடந்த உள்ளூர் போட்டிகளில் விளையாடி எனது திறமையை வளர்த்துக் கொண்டேன்" என்று ரோஹித் தெரிவித்தார். மேலும் தனது குடும்பத்தில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தனது பெற்றோரால் தன்னை வளர்க்க முடியாமல் தாத்தாவிடம் ஒப்படைத்ததாகவும், அவரே தன்னை வளர்த்து ஆளாக்கியதாகவும் ரோஹித் சர்மா உருக்கத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.

ரோஹித் சர்மா இதுவரை ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பைக்கான அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. அதன்பின் கேப்டனாக 2023 உலகக்கோப்பையில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை வழிநடத்தினார். அதிலும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வெல்லவில்லை. இந்த நிலையில் 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடி கோப்பை வெல்ல முயற்சித்து வருகிறார்.