“US வேண்டாம்; இந்தியாவே போதும்..”
“US வேண்டாம்; இந்தியாவே போதும்..” - அடம்பிடித்த 94 வயது ஆந்திர மூதாட்டி.. நடந்தது என்ன?
எல்லோரும் அமெரிக்காவுக்குச் செல்ல ஆசைப்படும் வேளையில், அமெரிக்காவில் நெடுங்காலம் தங்கியிருந்த மூதாட்டி ஒருவர், இந்தியாவிலேயே தனது இறுதி நாட்களைக் கழிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
ஆந்திரப் பிரதேசம் பாபட்லா (Bapatla) மாவட்டம், சின்னகஞ்சாம் மண்டலத்தில் உள்ள சிந்தகும்பாலா கிராமத்தைச் சேர்ந்தவர் கொண்டிரகுண்ட மகாலட்சுமம்மா (Kondragunta Mahalakshmamma). இவர் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் புற்றுநோய் நிபுணராக (Oncologist) இருந்த தனது மகன் டாக்டர் புச்சையா சௌத்ரியுடன் அங்குச் சென்று வசித்து வந்தார். கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை (US Citizenship) வழங்கப்பட்டது. அங்கு சுமார் 18 ஆண்டுகள் அவர் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு அவரது மகன் இந்தியாவுக்குத் திரும்பி மங்களகிரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றத் தொடங்கினார்.
At 94, Kondragunta Mahalakshmamma Garu gave up her US citizenship and returned to Bharat to spend her final years in her motherland. Her decision serves as a graceful answer to those who undervalue Bharat, proving that no place can replace one's roots. pic.twitter.com/NCvsOaDqA2
இதைத் தொடர்ந்து, மகாலட்சுமம்மாவும் தனது குடும்பத்துடன் மீண்டும் இந்தியாவுக்கு வந்து தனது சொந்தக் கிராமத்தில் குடியேறினார். வயது முதிர்ந்த காலத்தில், ”தனக்கு அமெரிக்க பாஸ்போர்ட்டோ அல்லது அங்குள்ள வசதிகளோ தேவையில்லை என்றவர், தான் பிறந்த மண்ணிலேயே தனது இறுதி மூச்சை விடவேண்டும்” என்றும் அவர் உறுதியாக நம்பினார். இதற்காக, அவர் தனது அமெரிக்கக் குடியுரிமையைத் தானாக முன்வந்து அதிகாரப்பூர்வமாகத் துறந்தார்.
இதற்காக, இந்திய குடியுரிமை கோரி மீண்டும் ஆன்லைனில் விண்ணப்பித்த அவர், சமீபத்தில் பாபட்லா மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்குமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். அப்போது அவர், "கலெக்டர் அவர்களே, எனக்கு இப்போது 94 வயதாகிறது, 95-ஐ நெருங்கப் போகிறேன். ஓர் இந்தியக் குடிமகளாக எனது தாய்நாட்டின் மண்ணில் எனது இறுதி நாட்களைக் கழிக்க வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே ஆசை. நான் இறந்த பிறகு எனது இறுதிச் சடங்குகள் எனது சொந்த கிராமத்திலேயே நடக்க வேண்டும். தயவுசெய்து எனக்கு விரைவில் இந்தியக் குடியுரிமை கிடைக்க உதவுங்கள்" எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, அவரது கோரிக்கையைத் தொடர்ந்து, தேவையான சட்ட நடைமுறைகள் முடிக்கப்பட்டு மகாலட்சுமம்மாவுக்கு தற்போது இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் வசதிகள் இருந்தாலும், அவையனைத்தும் அழகிய தாய்நாட்டிற்கு ஈடாகாது என்பதை ஆந்திர மூதாட்டியின் செயல் உணர்த்தியுள்ளது.