📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 10, 2026 08:33 PM

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்.16-ம் தேதி வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.11) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

செப்.12-ம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், செப்.13, 14 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், செப்.15-ம் தேதி விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், செப்.16-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

உள் தமிழகத்தில் நாளை (செப்.11ம்) முதல் 14-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைப் பொழிவு:

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அணையில் 3 செ.மீ, கடலூர், புதுச்சேரி பாகூர், பத்துக்கண்ணு, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், கடலூர் மாவட்டம் குடிதாங்கி, விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம், நேமூர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.