📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 01, 2026 04:33 AM

வார்த்தையை அளந்து பேசனும்.. கங்கனா ரானவத்திற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சோனு சூட்!

வார்த்தையை அளந்து பேசனும்.. கங்கனா ரானவத்திற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சோனு சூட்!

மும்பை: பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக அறியப்படும் நடிகையும், அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், மீண்டும் தனது பேச்சால் தேசிய அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளார். சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் தயக்கமின்றி கருத்து தெரிவித்து வரும் அவர், இந்த முறை மாணவர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை விமர்சித்த விதம் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. அந்த கருத்துக்கு தற்போது நடிகர் சோனு சூட் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் மாணவர் போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. அந்தப் போராட்டம் குறித்து தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத், இன்றைய இளைஞர்களை மிகவும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். குறிப்பாக, போராட்டக்காரர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

கங்கனாவின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது நடிகர் சோனு சூட்டும் தனது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சோனு சூட், "அவர் என்ன சொன்னார் என்பதை முழுமையாக நான் கேட்கவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். இந்த இளைஞர்கள்தான் நடிகர்களை உருவாக்குகிறார்கள். இன்று நீங்கள் இருக்கும் இடத்துக்கு வருவதற்கும் அவர்கள் அளிக்கும் ஆதரவே காரணம். அவர்கள் உங்களுடன் இருக்கும் வரைதான் உங்கள் பயணம் தொடரும். அவர்களின் ஆதரவு இல்லாமல் எந்தத் துறையிலும் நீண்ட காலம் நிலைத்து நிற்பது எளிதல்ல. அதனால் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்" என்று கூறினார்.

மக்கள் தான் பலமே: அதோடு, பொதுமக்களின் நம்பிக்கையும் ஆதரவும் எந்தத் துறையிலும் மிகப்பெரிய பலம் என்றும் அவர் வலியுறுத்தினார். "நீங்கள் நடிகராக இருந்தாலும் சரி, மருத்துவராக இருந்தாலும் சரி, வேறு எந்தத் தொழிலில் இருந்தாலும் சரி, மக்கள் உங்களுடன் இணைந்திருக்கும் வரைதான் உங்கள் பயணத்திற்கு அர்த்தம் இருக்கும். பொதுமக்களை மதிப்பது மிகவும் அவசியம்" என்று சோனு சூட் தெரிவித்தார்.

வார்த்தை ரொம்ப முக்கியம்: இதையடுத்து, கங்கனா ரனாவத் போராட்டக்காரர்களை இழிவாக விமர்சித்தது குறித்து நேரடியாகக் கேட்கப்பட்டபோது, சோனு சூட் எந்த தயக்கமும் இல்லாமல் தனது கண்டனத்தை பதிவு செய்தார். "அவர் உண்மையிலேயே அப்படிப் பேசியிருந்தால், அது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். அப்படிப் பேசக் கூடாது. பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டும். வாயிலிருந்து வெளிவரும் வார்த்தையை திரும்பப் பெற முடியாது. அதனால் யோசித்து பேசுவது மிகவும் முக்கியம். மக்கள் என்பவர்கள் கடவுளின் மற்றொரு வடிவம். அவர்களை மதிப்பதே முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்" என்று அவர் கூறினார்.

ஆதரவு: கங்கனாவின் கருத்துக்கு எதிராக சோனு சூட் தெரிவித்த இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இளைஞர்களை மதிக்க வேண்டும், பொதுமக்களின் ஆதரவை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்ற அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், சோனு சூட்டின் விமர்சனத்திற்கு கங்கனா ரனாவத் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.