Vadhandhi 2 Review: வதந்தி 2 விமர்சனம்.. மணியோட மிஸ்டரி என்ன?.. தாடி போலீஸ் சசிகுமார் கண்டுபிடித்தாரா?
சென்னை: அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான வதந்தி - வெலோனியின் கட்டுக்கதை வெப்சீரிஸின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் அதன் 2வது சீசனாக மிஸ்டரி ஆஃப் மணி எனும் வெப்சீரிஸை உருவாக்கியுள்ளார். தற்போது அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமாகி வரும் அந்த வெப்சீரிஸின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
வதந்தி வெப்சீரிஸில் போலீஸ் ராமர் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு துணையாக நடித்த விவேக் பிரசன்னா இந்த சீசனில் சசிகுமாருக்கு துணையாக தொடர்கிறார். ஃபோர்த் காலம் பத்திரிகையின் ஆசிரியராக ஹரிஷ் பெரடியும் தொடர்கிறார். மற்றபடி இது முழுக்க முழுக்க புதிய கதை.
எஸ்ஐ மூசா ராசா கதாபாத்திரத்தில் தாடி வைத்த போலீஸாக சசிகுமார் மணியின் மர்மத்தை எப்படி எல்லாம் கண்டு பிடிக்க போராடுகிறார் அவரது தாடிக்கான வழக்கு என்ன ஆனது என ஏகப்பட்ட கதைகளுடன் 8 எபிசோடுகள் கொண்ட வெப்சீரிஸாக உருவாகியுள்ள இந்த வதந்தி 2 வொர்த்தா? வொர்த் இல்லையா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
வதந்தி சீசன் 2 - மிஸ்டரி ஆஃப் மணி கதை: 8 வழிச்சலை போடுவதற்காக மத்திய அமைச்சர் பூமி பூஜையில் கலந்துக் கொள்ளும் போது அங்கே மண்ணை தோண்டியவுடன் எலும்புக்கூடு கிடைக்கிறது. ஏற்கனவே பனிஷ்மண்ட் போஸ்ட்டில் வேலை பார்த்து வரும் சசிகுமாரை தேடி உயர் போலீஸ் அதிகாரி அனகா நீங்க தான் இதை கண்டு பிடித்து தர வேண்டும் என இடியாப்ப சிக்கல் கேஸை மூசா ராசாவிடம் (சசிகுமார்) தருகிறார்.
சென்ட்ரல் - ஸ்டேட் பிரச்னையை உண்டாக்கியுள்ள இந்த எலும்புக்கூடு யாருடையது? அந்த கொலைக்கு காரணமானவர் என சிறையில் இருக்கும் மாடு பிடி வீரர் முடக்கத்தான் மணி யாரு? அவர் தான் இந்த கொலையை செய்தாரா? இல்லையா? டிஎன்ஏ டெஸ்ட்டின் மூலம் ஏற்படும் சீரியல் கில்லர் திருப்பம், பாலின பேதமில்லா காதல் என பல விஷயங்களை முடிச்சி பேல முடிச்சிப் போட்டு கடைசி எபிசோடில் கட்டவிழ்க்கும் கிரைம் த்ரில்லர் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையாகவே இந்த வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது.
வெப்சீரிஸ் எப்படி இருக்கு?: இஸ்லாமிய காவலதிகாரி மூசா ராசாவாக தாடியுடன் சசிகுமார் நடித்துள்ளார். பல வருடங்களாக அவருக்கும் அவரது மனைவி அபர்ணா தாஸுக்கும் குழந்தை இல்லாத நிலையில், அல்லாவை வேண்டிக் கொண்டு தாடி வைத்துக் கொள்கிறார். 8 வருடங்களுக்குப் பிறகு அபர்ணா தாஸும் கர்ப்பமாகி விடுகிறார். கர்ப்ப காலத்தில் மனைவியை பார்த்துக் கொள்ள முடியாமல் மணியின் மர்மத்தை கண்டறிய ஒரு காவலதிகாரியாகவும் கணவனாகவும் எப்படி கஷ்டப்படுகிறார் என்பதை தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் கடைசி வரை கடத்தி கைதட்டல்களை பெறுகிறார் சசிகுமார்.
எஸ்பி ரத்திக்கா கதாபாத்திரத்தில் அனகா கடைசி வரை சசிகுமாருக்கு சப்போர்ட் செய்யும் வேலையை சிறப்பாக பார்த்துள்ளார். அவருக்கும் அவரது கணவருக்கும் இடையேயான பிரச்னை, பின்னர் அது சரி ஆவது என சசிகுமார் குடும்ப டிராக் போல அனகாவின் குடும்ப டிராக்கையும் டெப்த்தாகவே இயக்குநர் காட்டியுள்ளார்.
கதையின் நாயகனாக முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தில் யஷ்வந்த் நடித்துள்ளார். அவனது காதலி நிலாவதியாக கருடன் ஹீரோயின் ரேவதி சர்மா நடித்துள்ளார். காதலி நிலாவதியையும் தங்கை பூர்ணாவையும் கொலை செய்த வழக்கில் தான் மணி சிறையில் இருக்கிறார். ஆனால், உடல் கிடைக்காத நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை.
சசிகுமார் கைக்கு கேஸ் வந்த நிலையில், எலும்புக்கூடை வைத்து தோண்டி துலாவி ஆராய்ச்சி செய்ததில் மணி பற்றி சசிகுமாருக்கு தெரிய வர முடக்கத்தான் மணிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், உண்மையான குற்றவாளி மணி தானா?: எதனால் அவன் தனது தங்கையையும் காதலியையும் கொலை செய்தான் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சி எல்லாம் சிறப்பாகவே உள்ளது.
பார்க்கலாமா? வேண்டாமா?: ஆனால், வெப்சீரிஸின் நீளத்தை நீட்ட வேண்டும் என்பதற்காக நடுவே சீரியல் கில்லர் ஆங்கிள் சென்றது தான் விறுவிறுப்புக்கான 4 எபிசோடுகளுக்குப் பிறகு அடுத்த 3 எபிசோடுகள் நீ புடுங்குனது பூராமே தேவையில்லாத ஆணி என சொல்ல வரும் இடத்தில் எல்லாம் மண்டைக் கடுப்பாகி விடுகிறது. ஹியூமன் எரர் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சேத்தன் போர்ஷனை வைத்து சொன்னது அதிர்ச்சியை அளித்தாலும் ஏகப்பட்ட லாஜிக் கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை.
நடிகர்கள் அனைவருமே தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துக் கொடுத்துள்ளனர். ஆனால், வெப்சீரிஸ் முழுக்கவே சாப்பிட்டு விட்டு சாய்ங்காலம் தேடலாம் என்கிற உணர்விலேயே ரொம்பவே ஸ்லோவாக நகர்வது போன்ற உணர்வு ஆரம்பம் முதல் இறுதி வரை இருப்பது மைனஸ் ஆக தெரிகிறது.
கடைசி கிளைமேக்ஸ் ட்விஸ்ட் வித்தியாசமாகவும் அச்சமூட்டும் வகையில் இருந்தாலும், அந்த இடமும் வலுவான காரணமாக இல்லையே என்கிற உணர்வுகளும் எழத்தான் செய்கிறது. மலையாள கிரைம் த்ரில்லர் வெப்சீரிஸ்களுக்கு இணையாக தமிழில் ஒரு வித்தியாசமான கிரைம் த்ரில்லர் வெப்சீரிஸை கொடுக்க இயக்குநர் மெனக்கெட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. சில குறைகள் இருந்தாலும் இந்த வார இறுதியை கண்டிப்பாக அமேசான் பிரைமில் வதந்தி சீசன் 2 - மிஸ்டரி ஆஃப் மணி வெப்சீரிஸை ஒருமுறை பார்த்து த்ரில் ஆகலாம். இது ஒரு அடல்ட் வெப்சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபாச வசனங்கள், லிப் லாக் முத்தக் காட்சிகள் உள்ள நிலையில், குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.