Vadivelu Birthday
சென்னை: வைகை புயல் வடிவேலு இப்போது திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். இந்த முறை காமெடி ரோல்கள் மட்டுமில்லாமல் அதற்கு சமமாக கேரக்டர் ரோல்களையும் ஏற்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதுவும் பெரிய ரெஸ்பான்ஸை பெறுகின்றன.இந்நிலையில் இன்று அவர் தனது 66வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
சினிமாவில் உயரத்தில் இருந்தபோது வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. அதனையடுத்து கேப்டனை தாக்கி பேச வேண்டுமென்பதற்காக 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக மேடைகளில் ஏறி பேச ஆரம்பித்தார் வைகை புயல். ரொம்பவே அநாகரீகமாக பேசினாலும் அதற்கு விஜயகாந்த் திருப்பி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. அப்போது தான் பேசியதை நினைத்து இப்போதும் வருத்தப்படுகிறார் வடிவேலு. அவரது இறப்புக்குக்கூட செல்ல முடியாத சூழ்நிலைகூட உருவானது.
மீண்டும் வந்த வடிவேலு: இதற்கிடையே விஜயகாந்த்தை எதிர்த்து பேசினாலும்; அந்த வருடம் அதிமுக - தேமுதிக கூட்டணிதான் வென்றது. அதனைத் தொடர்ந்து வடிவேலுவுக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து ஒருகட்டத்துக்கு மேல் இல்லாமலேயே போய்விட்டது. ஒருவழியாக சில வருடங்களில் நிலைமை எல்லாம் சரியாகி மீண்டும் நடிக்க வந்தார் அவர். அதன்படி முதலில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 படங்களில் காமெடி ரோல்கள் ஏற்றார். அது ஒர்க் அவுட் ஆகவில்லை. ரூட்டை மாற்றி கேரக்டர் ரோல்களை ஏற்றார். அப்படி அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
சூப்பர் பெயர்: அதனையடுத்து ஃபகத் பாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்தார். மறதி நோயாளியாக நடித்தார் என்பதைவிடவும் வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அந்த கேரக்டரோடு ஒன்றிப்போய்விட்டார். நிச்சயம் மாமன்னன், மாரீசன் ஆகிய படங்கள் அவரது திரைத்துரையில் மைல்கற்கள்தான். ஏற்கனவே குணசித்திர கேரக்டர்களில் கலக்கியிருந்தாலும் இந்த இரண்டு படங்களும் இந்த காலத்தில் வந்து ஸ்பெஷலாக மாற்றியிருக்கின்றன. ஜென் ஸி தலைமுறையினரிடமும் வடிவேலு சிறந்த குணசித்திர நடிகர் என பதிந்துவிட்டார்.
அடுத்த படங்கள்: முழுக்க முழுக்க கேரக்டர் ரோல்களிலேயே செல்லாமல் காமெடி வேடங்களுக்கும் ஓகே சொல்கிறார்தான். சக்சஸ்ஃபுல் இயக்குநரான சுந்தர்.சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படத்திலும் அப்படித்தான் நடித்தார். ஆனால் அது முழுக்க ஒர்க் அவுட் ஆகவில்லை. அடுத்ததாக பிரபுதேவாவுடன் பேங் பேங் படத்தில் நடித்துவருகிறார்.
வடிவேலு சொத்து மதிப்பு: இந்நிலையில் இன்று அவர் தனது 66வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லிவரும் சூழலில்; வைகை புயலின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி மொத்தம் அவரிடம் 90 கோடி ரூபாயிலிருந்து 100 கோடி ரூபாய்வரை சொத்து இருக்குமாம். சென்னை, மதுரை ஆகிய ஊர்களில் பிரமாண்டமான சொகுசு பங்களாக்களையும் வைத்திருக்கும் அவர்; ஏகப்பட்ட சொகுசு கார்களையும் இரண்டு பங்களாக்களிலும் நிறுத்தி வைத்திருக்கிறாராம்.