Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’டெல்லிக்கு வந்து வைகோ புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல்காந்தியோடு இணைந்து, முதல்வர் விஜய் பங்கேற்பதை பாஜக தேசிய தலைமை விரும்பவில்லை. துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனும் இதில் பங்கேற்கவில்லை’
தலைநகர் டெல்லியில் வரும் 4ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற உரைகள் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் வைகோவின் புத்தகத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட, தமிழக முதல்வர் விஜய் முதல் பிரதியை பெற்றுக்கொள்வதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழிலும் இந்த மாதிரியே அச்சிடப்பட்டிருந்தது.
ஆனால், டெல்லியில் நடைபெறும் வைகோ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் திடீரென மறுத்துவிட்டதாகவும், வேறு முக்கிய அலுவல் இருப்பதால் புத்தக வெளியிட்டு விழாவில் முதல்வர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வைகோவிற்கு முதல்வர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜயை சந்தித்த வைகோ – உறுதியாக மறுத்த விஜய்
இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வைகோ பேசினார். அப்போதும் வர முடியாததற்கான காரணத்தை நேரடியாக வைகோவிடம் கூறியிருக்கிறார் விஜய். ஆனாலும், முதல்வர் விஜயை சமாளித்து, எப்படியாவது டெல்லிக்கு வர வைத்துவிடவேண்டும் என்பதற்காக வைகோ தொடர்ந்து மெனக்கிட்டிருக்கிறார். குறிப்பாக, ’உங்களது பெயரையெல்லாம் போட்டு ஏற்கனவே அழைப்பிதல் அச்சடிக்கப்பட்டு விட்டது. இந்த நேரத்தில் நீங்கள் வரவில்லையென்று சொன்னால் அது சரியாக இருக்காது’ என்றும் சொல்லிப் பார்த்திருக்கிறார். ஆனால், டெல்லி வர முடியாது என்பதில் விஜய் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மொழிப்பெயர்ப்பு புத்தக வெளியிட்டு விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்ற வாக்குறுதியோடு தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார் வைகோ.
செய்தியாளர்களிடம் மாற்றி பேசிய வைகோ ?
இந்நிலையில், தலைமைச் செயலகம் வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்த வைகோ, டெல்லிக்கு முதல்வர் விஜய் வந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால், அவரை நானே எனது புத்தக வெளியிட்டு விழாவிற்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று பேசியிருக்கிறார். பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான வைகோவிற்கு அழைப்பிதழில் பெயர் போடுடுவதற்கு முன்னர், விஜய் விழாவிற்கு வந்தால் கூட்டம் கூடும் என்பது தெரியாதா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தாலும் விஜய் வர மறுத்துவிட்டார் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாத வைகோ, இப்படி மாற்றிப் பேசியிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
முதல்வர் விஜய்க்கு பாஜக மேலிடம் அழுத்தம் ?
அதே நேரத்தில் முதலில் வருவதாக சொல்லிவிட்டு பின்னர் ஏன் முதல்வர் விஜய், வைகோவின் புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்திருக்கிறார் என விசாரித்தபோது, அதற்கு டெல்லி பாஜக மேலிட அழுத்தம் தான் காரணம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக செல்ல முடிவெடுத்துள்ள முதல்வர் விஜய், ராகுல்காந்தி, மல்லிகார்ஜூனா கார்க்கே உள்ளிட்ட ஒரு காங்கிரஸ் பட்டாளமே பங்கேற்கவுள்ள இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றால், மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு எதிர்பார்க்கும் உதவிகள் உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை என அங்கிருந்து தகவல் வந்ததாக கூறப்படுகிறது. அதோடு, ஆளுநர் மூலமாக மீண்டும் சிக்கலை உருவாக்கும் சூழல் நிலை ஏற்படும் என்றும் ரெட் சிக்னல் வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, ஏற்கனவே தவெக அரசில் காங்கிரஸ்க்கு இரண்டு அமைச்சரவை இடம் கொடுத்ததிலும் பாஜக தேசிய தலைமை கடும் அப்செட்டில் இருக்கிறது. இந்நிலையில், ராகுல்காந்தியோடு மீண்டும் ஒரே மேடையில் விஜய் பங்கேற்றால், அது தேவையற்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கும் என விஜயின் ஆலோசர்களுக்கும் அறிவுறுத்திய நிலையிலேயே, இந்த விழாவிற்கு முதல்வர் விஜய் செல்ல மறுத்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீட் போராட்டத்திற்கு செல்லாமல் புத்தக வெளியீட்டிற்கு செல்வதா ?
அதோடு, பல நாட்களாக டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையே பதவி விலக வைத்துள்ளனர். ஆனால், இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக முதல்வர் விஜய் நேரடியாக எந்த பதிவையும் இடவில்லை. ராகுல்காந்தி கைதுக்கு கூட ஒருநாள் கழித்தே விஜய் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இந்த நேரத்தில் டெல்லி செல்வது உசிதமாக இருக்காது என்பதாலும் இந்த முடிவை முதல்வர் விஜய் எடுத்திருப்பதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
துணைக் குடியரசுத் தலைவரை அழைக்க திட்டம் ?
மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு துணை குடியரசுத் தலைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சிபி ராதாகிருஷ்ணனை முதலில் அழைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிய நிலையில், ராகுல்காந்தியின் தேதி கிடைத்துவிட்டதாகவும் அதனால் சிபி ராதாகிருஷ்ணனை வைகோ அழைக்கவில்லையென்றும் மதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
ராகுல்காந்தி பங்கேற்பதிலும் சிக்கல் ?
அதே நேரத்தில் இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், முதல்வர் விஜய் வர மறுத்தது மாதிரி, ராகுல்காந்தியும் மறுக்கக் கூடும் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. காரணம், வைகோவின் நாடாளுமன்ற உரைகளில் பெரும்பாலும் ராஜீவ்காந்தி முதல் மன்மோகன் சிங் வரையிலான பல்வேறு பிரதமர்களையும் காங்கிரஸ் கட்சி ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தையும், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட எழு பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்துமே வைகோ பேசியிருக்கிறார். அது முழுக்க, முழுக்க காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உரையாகவே இருந்திருக்கிறது. இந்நிலையில், தங்கள் கட்சிக்கு எதிரான உரைகளை ராகுல்காந்தியே எப்படி வெளியிட முடியும்? என்ற கேள்வியையும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ராகுல்காந்திக்கு எடுத்துக் கூறவிருப்பதாகவும், ஒருவேளை ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர்களின் வலியுறுத்தலை ஏற்றுக்கொண்டால் அவரும் புத்தக வெளியீட்டிற்கு செல்ல மறுப்பார் என்றும் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி