வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை
வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை - பொதுமக்களுக்கு நிம்மதி தர 700 மெட்ரிக் டன் கொள்முதல்
சென்னை, தண்டையார்பேட்டை சரக்கு ரயில் முனையத்திற்கு வந்தடைந்த வெங்காயத்தை, நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் பணியை அமைச்சர் காந்திராஜ் தொடங்கி வைத்தார்.
Published : October 9, 2026 at 2:17 PM IST
சென்னை: வெங்காயத்தின் விலை ரூ. 50 முதல் ரூ. 70 வரை உயர்ந்த நிலையில், நியாய விலையில் வெங்காயம் வழங்க 700 மெட்ரிக் டன் வெங்காயத்தை தமிழ்நாடு கொள்முதல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் அத்யாவசிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அரிசியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது. இதன் வரிசையிலேயே அண்மையில் வெங்காயமும் இணைந்துள்ளது.
சென்னை, கோயம்பேட்டில் மொத்த விலையில் நாசிக் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 50-க்கும், சில்லரை விலையில் ரூ. 70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், ஆந்திரா வெங்காயம் கோயம்பேட்டில் மொத்த விலையில் ரூ. 40-க்கும், சில்லரை விற்பனையில் ரூ. 50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. முக்கியமாக, தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு, நியாய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.
அரசே வெங்காயத்தை கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகள் வாயிலாக விற்பனை செய்து வருகிறது. கூட்டுறவுத் துறையின் மூலம் ஏற்கனவே ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் நாசிக் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டு கிலோ ரூ. 35-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் மூலம் 910 மெட்ரிக் டன்னும், தேசிய நுகர்வோர் கூட்டுறவிடம் இருந்து 65 மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
மேலும், இரண்டாவது கட்டமாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் மூலம் 1,414.33 மெட்ரிக் டன்னும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு நிறுவனத்திடம் இருந்து 460 மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், பொதுமக்களிடையே அதிகரித்துக் காணப்படும் தேவை மற்றும் வரவேற்பைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது கட்டமாக 700 மெட்ரிக் டன் வெங்காயத்தை தேசிய நுகர்வோர் கூட்டுறவில் இருந்து கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகள் மூலம் தொடர்ந்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
இதன் அடிப்படையில், தேசிய நுகர்வோர் கூட்டுறவிடம் இருந்து 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த வெங்காயம் இன்று (அக்டோபர் 9) சென்னை, தண்டையார் பேட்டை சரக்கு ரயில் முனையத்திற்கு வந்தடைந்தது. இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் பார்வையிட்டு, பின்னர், நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்த நடவடிக்கையின் மூலம், வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையை குறைத்து ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு வெங்காயம் நியாயமான விலையில் தொடர்ந்து கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.