📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 04, 2026 12:01 PM

வீடுகளில் ஜூன் மின் கட்டணம் அதிகரித்தது ஏன்? மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு

வீடுகளில் ஜூன் மின் கட்டணம் அதிகரித்தது ஏன்? மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு

கோவை: கடந்த ஜூன் மின் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்தது தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை தொடர்ந்து, கோவையில் 20 ஆயிரம் வீட்டு மின் இணைப்புகளை, மின்வாரிய அதிகாரிகள் மறு ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் இறுதியில் கட்டணம் உயர்த்தப்பட்டது எதனால் என்பது தெரியவரும்.

தமிழகம் முழுக்க இது போன்று 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் மறுஆய்வு நடத்தப்படுகிறது. மே கட்டணத்தோடு ஒப்பிட்டால், ஜூனில் இரு மடங்கு அதிகரித்ததாக புகார்கள் வந்தன.

அது கட்டணம் நிர்ணயிப்பதில் ஏற்பட்ட பிரச்னை; மீட்டர் கணக்கீட்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக அதிகரித்திருக்கலாம் என்று, மின்வாரியத்தினர் நினைத்தனர்.

ஆனால் மின்கட்டணம் அதிகரித்ததாக, மின்வாரியமே பின்னர் விளக்கமளித்தது. பயனீட்டார்கள் அளித்த புகாரின் பேரில் எந்தெந்த மின் இணைப்பு தாரர்களுக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதோ, அதனை மறு ஆய்வு செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி, கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்தில் 4,194, மெட்ரோவில், 4,000, தெற்கில் 11,569 என்று மொத்தம் 19,763 மின் இணைப்புகளை, ஆய்வு செய்து வருகின்றனர்.

'கோவை மெட்ரோ, வடக்கு, தெற்கு ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் உள்ள 20,000ல், 90 சதவீத வீட்டு மின் இணைப்புகளில், ஆய்வு முடிந்தது.

மீதமுள்ள 10 சதவீத மின் இணைப்புகளில் ஆய்வு முடிந்த பின், உண்மையான நிலவரம் தெரியவரும்' என்கின்றனர் அதிகாரிகள்.

தலைமை பொறியாளர், 25 மின் இணைப்புகளையும், மேற்பார்வை பொறியாளர், 50 மின் இணைப்புகளையும், செயற்பொறியாளர், 75 மின் இணைப்புகளையும், துணைநிதி கட்டுப்பாட்டாளர், 50 மின் இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். இது தவிர உதவி செயற்பொறியாளர் 100, கணக்கு அதிகாரி 150, மூத்த மதிப்பீட்டு அதிகாரி 150, உதவி கணக்கு அதிகாரி 100, மதிப்பீட்டு அதிகாரி,150 மற்றும் உதவி பொறியாளர், 100 மின் இணைப்புகளை நேரடியாக சரி பார்க்க வேண்டும். வரும் 7க்குள் ஆய்வை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.