விஜய்யைச் சந்திக்க நடைப்பயணம்: சென்னை வந்த உபி இளையர், தமிழ்நாடு செய்திகள்
சென்னை: தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்க உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து நடைப்பயணமாகச் சென்னை வந்துள்ள இளையர், தமக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் அமன். அந்த இளையர் முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார்.
திரையிலும் சமூக, அரசியல் களங்களிலும் விஜய்யின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட அமன், முதல்வர் விஜய்யைத் தமிழகத்துக்கு நடைப்பயணமாக வந்து நேரில் சந்திக்க முடிவெடுத்தார்.
அதன்படி, தனது சொந்த ஊரான அலிகரில் இருந்து கடந்த ஜூலை 3ஆம் தேதி நடைப்பயணத்தைத் தொடங்கினார் அமன்.
ஏறக்குறைய 25 நாள்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், நேராக தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்குச் சென்றார்.
எனினும், முதல்வரைச் சந்திக்க முன் அனுமதி இல்லாததால் தலைமைச் செயலகத்துக்குள் அவரைக் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமன், முதல்வர் விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க நடைப்பயணம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
தேசப்பற்றை வலியுறுத்தும் விதமாக தேசியக் கொடியுடன் பயணம் மேற்கொண்டதாகவும் முதல்வர் விஜய் தேசிய அரசியலில் பங்காற்ற வேண்டும் என விரும்புவதாகவும் அமன் மேலும் தெரிவித்தார்.