📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 27, 2026 04:32 PM

விலகிய பனையூர் பாபு... அடுத்து யார்?

விலகிய பனையூர் பாபு... அடுத்து யார்?

விலகிய பனையூர் பாபு... அடுத்து யார்? - ஆள்தூக்கும் அறிவாலயம்... சமாளிப்பாரா திருமா?

த.வெ.க-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தாலும் வி.சி.க - தி.மு.க கூட்டணி தொடர வேண்டும் என்பதுதான் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் விருப்பம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு, அந்தக் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்துவிட்டு கட்சியிலிருந்து விலகியிருக் கிறார். இந்தச் சூழலில் ‘பாபுவின் விமர்சனங்கள் புறந்தள்ளக்கூடியவை அல்ல’ என்று வி.சி.க-வின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் சொல்லியிருப்பது கட்சிக்குள் கடும் அனலைக் கிளப்பியிருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகச் சொன்ன விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தனது முடிவை மாற்றிக்கொண்டு அமைச்சரவையில் பங்கு பெற்றிருக்கிறது. வி.சி.க சார்பில் துணைப் பொதுச்செயலாளரும், திண்டிவனம் எம்.எல்.ஏ-வுமான வன்னி அரசு சமூக நீதித்்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க இடம் பெறுவதை அந்தக் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் விரும்பவில்லை எனக் கிசுகிசுக்கப்பட்ட வேளையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலகியிருக்கிறார் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும், செய்யூர் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பனையூர் பாபு.

ஆர்.எஸ்.எஸ் பிள்ளையைத் தத்தெடுப்பதா?

பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ ‘விசில் அடிப்பவர்களெல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது; அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் பேசிய அரசியலையும், கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர்கள்’ என்று சூளுரைத்த அண்ணன் திருமா, இன்று அவர்களுட னேயே கைகோக்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாகும்.

நேற்று வரை ஒரு நடிகரை ‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி பெற்றெடுத்த பிள்ளை’ என்று கடுமையாக விமர்சித்த அவர், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பதுபோல் நிலைப்பாடு எடுப்பது, அவர் இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கை களிலும், கருத்தியலிலும் தடம்மாறத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது” என்று சாடியிருக்கிறார்.

நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள் சிலர், “2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செய்யூர் தொகுதியில் வேலையைத் தொடங்கியிருந்தார் பாபு. ஆனால், பாபுக்கு சீட் கொடுத்துவிடக் கூடாது என முன்பே தீர்மானித்த திருமா, பொதுச் செயலாளர் சிந்தனை செல்வனை செய்யூரில் போட்டியிடும்படி உத்தரவிட்டார். சீட் கிடைக்காத அதிருப்தியிலிருந்த ஆளூர் ஷாநவாஸுக்குக் கட்சியில் முதன்மைச் செயலாளர் பொறுப்பும், எஸ்.எஸ்.பாலாஜிக்குப் பொருளாளர் பொறுப்பும் வழங்கிய திருமா, பனையூர் பாபுவுக்கு எந்த முக்கியப் பொறுப்பையும் தராதது அவரது அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்தது.

பாபுவின் விமர்சனங்களைப் புறந்தள்ள முடியாது!

தொடர்ந்து பேசியவர்கள், “பனையூர் பாபு வெளியேறிய சூழலில் எக்ஸ் தளத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டார் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன். ‘பனையூர் பாபு தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ எனத் தொடங்கும் அந்தக் கடிதத்தில் ‘கட்சியின் அண்மைக்கால முடிவுகளின் மீது தாங்கள் வெளிப்படுத்திய வருத்தம் புறந்தள்ளக் கூடியது அல்ல. ஆயினும், ஒன்றைப் பணிவுடனும் உரிமையுடனும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். தலைவரின் எந்த முடிவும் தன்னலம் சார்ந்ததல்ல.

ஆயிரமாண்டுக்கால சமத்துவக் கனவுக்காக தன் வாழ்வை, தன் இளமையை ஒப்படைத்துக்கொண்டவர் அவர். குழந்தையின் கையைப் பிடித்து முன்னால் வழிகாட்டிச் செல்லும் ஒரு தாய், சில நேரங்களில் அத்துமீறி ஓடும் குழந்தையின் பின்னால் ஓடி வருவதைப்போல தலைவர், தன் அரசியல் உத்தியை மாற்றியிருக்கிறார். உத்தி மாறினாலும் சாதி ஒழிப்பையும், சனாதன எதிர்ப்பையும் கைவிடவா போகிறோம் நாம்?’ என்றிருக்கிறார் சிந்தனை செல்வன்” என்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள், ``த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியிருக்கிறார் பாபு. ஆனால், பாபு வெளிப்படுத்திய வருத்தம் புறந்தள்ளக்கூடியது அல்ல என சிந்தனை செல்வன் சொல்வது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. மேலும், ‘குழந்தையின் கையைப் பிடித்து முன்னால் வழிகாட்டிச் செல்லும் ஒரு தாய் சில நேரங்களில் அத்துமீறி ஓடும் குழந்தையின் பின்னால் ஓடி வருவதைப்போல தலைவர் தன் அரசியல் உத்தியை மாற்றி இருக்கிறார்’ என்கிறார்.

இங்கே ‘அத்துமீறி ஓடும் குழந்தை என யாரைச் சொல்கிறார்... வன்னி அரசுவைச் சொல்கிறாரா... ஒட்டுமொத்தக் கட்சியைச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், விஜய்யின் அமைச்சரவையில் வி.சி.க இடம்பெற்றதை கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விரும்பவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. ஆள் தூக்க அறிவாலயம் முனைப்பு காட்டிவரும் நிலையில், பனையூர் பாபுவோடு நிற்கப்போகிறதா... லிஸ்ட் நீளுமா என்பதையும், திருமா இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றனர்.