📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 13, 2026 05:35 PM

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மல்லிகை கிலோ ரூ.1,700

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மல்லிகை கிலோ ரூ.1,700

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மல்லிகை கிலோ ரூ.1,700-க்கு விற்பனை

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மதுரை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் பூக்களும் விற்பனை செய்யப்படுகிறது.

Published : September 13, 2026 at 5:05 PM IST

மதுரை: முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரையில் மல்லிகை பூ கிலோ ரூ. 1,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், கொட்டாம்பட்டி, மேலூர், அழகர் கோயில் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் மதுரை மல்லி விற்பனை செய்யப்படுகிறது.

அதுமட்டுமன்றி அண்டை மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் மதுரை மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் விளைவிக்கப்படுகிறது. அவையும் மதுரை மலர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மலர் சந்தையில் விற்பனையாகும் மல்லிகை பூவின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மல்லிகை பூவின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

அதன்படி, மதுரை மல்லி கிலோவுக்கு ரூ. 1,700-க்கும், முல்லை ரூ. 900-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 1000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி மல்லி, சம்பங்கி, பன்னீர் ரோஸ், தாமரை ஆகியவையும் கணிசமான விலையேற்றத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்

இதுகுறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், “மதுரை மாவட்டத்தை பொருத்தவரை போதியளவில் மல்லிகை விளைச்சல் இல்லாத காரணத்தினால், தற்போது நாளொன்றுக்கு 2.5 டன் பூக்கள் வரத்து உள்ளது.

இன்று முகூர்த்த நாள், நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் விலை சற்று அதிகமாக உள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கை ஒட்டி பூக்களின் விலை நிலவரம் அடுத்த சில நாட்களுக்கு அதிகரித்து காணப்படும். புரட்டாசி மாதம் பிறந்து விட்டால் பூக்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.