விடாப்பிடி சி.ஜே.பி... நெருக்கடியில் பி.ஜே.பி... பதவி விலகுவாரா ஞானேஷ் குமார்?
விடாப்பிடி சி.ஜே.பி... நெருக்கடியில் பி.ஜே.பி... பதவி விலகுவாரா ஞானேஷ் குமார்?
இளைஞர்கள் பலரும் டெல்லி நோக்கிப் படையெடுக்க, பயந்துபோன பா.ஜ.க அரசு, டெல்லி எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியது. கூடவே, போராட்டத்துக்கு வருபவர்களைத் தடுத்து நிறுத்தியது; மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியது;
மீண்டும் ஒரு முறை போர்க்களமாக மாறியிருக்கிறது தலைநகர் டெல்லி. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காக்ரோச் ஜனதா பார்ட்டியும் (சி.ஜே.பி), `இந்தியா’ கூட்டணியும் தொடுத்த போராட்டம், மத்திய ஆட்சியாளர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. ஜனநாயகவழிப் போராட்டங்களை, தனது அதிகார பலம்கொண்டு பா.ஜ.க நசுக்க முயன்றதால், சூடேறிப்போயிருக்கிறது கரப்பான் பூச்சிப் படை! தலைநகர் டெல்லியில் நடப்பது என்ன..?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பா.ஜ.க-வுக்குச் சாதகமாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொண்டதாக அவருடன் இருந்த இரு தேர்தல் ஆணையர்களே குற்றம்சாட்டியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்.ஐ.ஆர் குளறுபடிகளுக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சுதந்திரமான தேர்தல்கள் உறுதிசெய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளும், சி.ஜே.பி கட்சியும் போராட்டங்களை அறிவித்தன.
‘இந்தியா’ கூட்டணிப் போராட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை டெல்லி போலீஸ் கைதுசெய்தது. ராகுல் காந்தி அந்நிய சக்திகளுடன் இணைந்து நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்வதாக பா.ஜ.க குற்றம்சாட்டிய நிலையில், அக்டோபர் 10-ம் தேதி டெல்லியில் மாபெரும் போராட்டத்துக்கு சி.ஜே.பி கட்சி அழைப்பு விடுத்தது.
30,000 காவலர்கள்... திறந்தவெளிச் சிறையான டெல்லி!
அக்டோபர் 10-ம் தேதி, டெல்லி நோக்கி விமானத்தில் பயணித்த சி.ஜே.பி-யின் முக்கிய முகங்களான அபிஜித் தீப்கே, செளரப் தாஸ் ஆகியோரை விமானத்திலேயே வைத்துக் கைதுசெய்தது டெல்லி போலீஸ். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியில் களமிறங்கிய முன்னாள் முதலமைச்சர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் ஆகியோரும் முடக்கப்பட்டு, கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர். சி.பி.எம் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபியை, காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்கி இழுத்துச் சென்ற காட்சிகளும் வெளியாகி, பரபரப்பைக் கிளப்பின.
போராட்டங்களின் அடையாளமான ஜந்தர் மந்தருக்கும் தடை!
இந்த அடக்குமுறைகளையும் மீறிப் போராட்டக் களத்தை நோக்கி முன்னேறிய ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தாக்கி, காவல்துறை வாகனங்களில் ஏற்றியது டெல்லி போலீஸ். ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்த `இந்தியா’ கூட்டணிக் கட்சியினர், அக்டோபர் 12-ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ராகுல். ஆனால், இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், தான் யாரையும் சந்திக்க முடியாது எனத் தலைமை நீதிபதி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் தீவிரமடையும் நிலையில், ஜந்தர் மந்தரைப் போராட்டம் செய்ய தடைவிதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறது டெல்லி போலீஸ். பல தசாப்தங்களாக அறவழிப் போராட்டங்களின் அடையாளமாக மாறியிருந்த ஜந்தர் மந்தரையே முடக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டிருப்பது பலத்த சந்தேகங்களைக் கிளப்புகிறது.
``ஜந்தர் மந்தரைப் போராடும் இடமில்லை என நீக்கிவிட்டது இந்த பயந்தாங்கொள்ளி சர்வாதிகார அரசு. இனி இந்த தேசமே ஜந்தர் மந்தராக மாறும்’’ எனச் சவால்விட்டிருக்கிறார் அபிஜித் தீப்கே. ``தேர்தல் முறைகேடுகளுக்குக் காரணமான ஞானேஷ் குமாரை நேரடியாகக் காப்பாற்றுவது பிரதமர் மோடிதான்’’ எனக் குற்றம்சாட்டியிருக்கிறார் ராகுல் காந்தி.
ஞானேஷ் குமாரைக் காப்பாற்றுவது ஏன்?
``பல்லாயிரம் காவலர்கள், பலத்த கட்டுப்பாடுகள், அடக்குமுறைகள் மூலம் ஞானேஷ் குமாரைக் காப்பாற்ற மத்திய பா.ஜ.க அரசு ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகிறது... அவர்மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்காமல் பாதுகாப்பது ஏன்... அமைதியாகப் போராடியவர்களைக் கைது செய்து, குடும்பத்தினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் தகவல் தராமல் அடைத்துவைப்பது எந்த வகையான ஜனநாயகம்... தேர்தல் ஆணையக் குளறுபடிகளுக்கு ஏன் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை?’’ என்று ஏராளமான கேள்விகள் நமக்குள் எழுகின்றன.
சி.ஜே.பி-யும், `இந்தியா’ கூட்டணியும் விடாப்பிடியாகப் போராட்டங்களை முன்னெடுத்து மத்திய அரசுக்குக் கடும் நெருக்கடி கொடுப்பதால், இந்த இதழ் உங்களது கைகளில் கிடைக்கும்போது, ஞானேஷ் குமார் ராஜினாமா செய்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
`போராட்டங்களை அதிகார பலத்தாலும் அடக்குமுறையாலும் ஒடுக்கிவிடலாம்’ என மத்திய அரசு நினைக்கிறது. ஆனால், மக்கள் மனதிலுள்ள கேள்விகளை எப்படி ஒடுக்குவது?