விடியல் வெற்றி ஆனதை போன்று ஒன்றியம் மத்தியம் ஆக வேண்டும்
விடியல் வெற்றி ஆனதை போன்று ஒன்றியம் மத்தியம் ஆக வேண்டும் - பாஜக எம்எல்ஏ பேரவையில் கோரிக்கை
தமிழ்நாட்டிற்கு மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பாஜக எம்எல்ஏ போஜராஜன் தெரிவித்தார்.
Published : August 10, 2026 at 7:26 PM IST
சென்னை: 'விடியல்' என்பதை 'வெற்றி' என்று மாற்றியதை போன்று, 'ஒன்றியம்' என்பதை 'மத்தியம்' என்று தமிழக அரசு மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ போஜராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன், "தமிழகத்தில் விவசாயிகளுக்கான பயிர்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் விவசாயிகள் துன்பத்தில் உள்ளனர். அதேபோன்று தேயிலை பயிரை ஊக்குவிக்க ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் அந்த நாட்டின் கல்வி வளர்ச்சியே அடிப்படையாகும். தமிழக அரசு நடத்தும் பள்ளிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தில் மூன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அந்த நிலையை மாற்றுவதற்கு அதிகாரிகள் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ.39 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க உள்ளது. ரயில்வே துறைக்கு மட்டும் ரூ.7,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது" என்றார்.
மனித விலங்கு மோதல் தொடர்பாக பேசிய அவர், "கூடலூரில் மனித–விலங்கு மோதல் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்தால் இந்த இடையூறைத் தவிர்க்கலாம். மேம்பாலம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். குந்தாவில் அரசு அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டுள்ள சமூகங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேயிலைக்கும் விலை நிர்ணயம் செய்து, ஊக்கத்தொகை அறிவிக்க வேண்டும்.
வாஜ்பாய் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் தேயிலைக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதேபோன்று தற்போது தேயிலைத் தொழிலாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் வந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் பட்டா மாறுதல் வழங்கப்படாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பட்டா மாறுதல் வழங்க வேண்டும். சிறு கிராமங்களில் வீடு கட்டுவதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். ஆனால், பெரிய பெரிய ரிசார்ட்டுகள் கட்டுவதற்கு எளிதில் அனுமதி கிடைக்கிறது.
தமிழக அரசு விடியல் என்று இருந்ததை தற்போது வெற்றி என்று மாற்றி வருகிறீர்கள். அதேபோல், ஒன்றியம் என்பதை மத்தியம் என்று மாற்றினால் நன்றாக இருக்கும்" என கோரிக்கை விடுத்தார்.
மேலும் பேசிய அவர், "இந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வந்தபோது, முதலமைச்சர் வெள்ளிக்கிழமை வேஷ்டி, சட்டை அணிந்து தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வந்ததைப் போன்று, இன்றும் வந்திருக்கலாம். இந்த உறுப்பினர்கள் அனைவரும் அதேபோன்று வந்தால் தமிழ் கலாச்சாரம் மேலும் மேம்படும்.
பாஜக எம்எல்ஏ போஜராஜனின் கருத்துகளுக்குப் பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜமோகன், " தமிழ், தமிழர் பேருணர்வை ஏற்படுத்தி, தமிழைக் காப்பாற்றுவதற்காகத்தான் இன்று சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மகாகவி பாரதியாரும் கோட்டு, சூட்டு அணிந்துதான் தமிழை வளர்த்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது என்பதற்காக எந்தப் பள்ளியும் மூடப்படவில்லை. அப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிவதற்காக ஆசிரியர்களை அனுப்பி, குறைகளைக் கேட்டறிந்து வருகிறோம்" என தெரிவித்தார்.