விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் முன்னிலை ஆகாத விஜய்
சென்னை: மணவிலக்குக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முதல்வர் ஜோசப் விஜய்யின் மனைவி சங்கீதா திரும்பப் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு முதல்வரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய், அவரது மனைவி சங்கீதா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஈராண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், 2025 டிசம்பர் மாதம் மணவிலக்கு கேட்டு சங்கீதா மனுத் தாக்கல் செய்தார்.
வழக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இதுவரை மூன்று முறை வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. எனினும், ஒருமுறைகூட விஜய்யும் சங்கீதாவும் நேரில் ஆஜராகவில்லை.
விசாரணை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) மீண்டும் நடைபெற்றது. காணொளி வாயிலாக விசாரணைக்குச் சங்கீதா முன்னிலையானார்.
சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதால் முதல்வர் விஜய்யால் ஆஜராக முடியவில்லை என்றும் வேறொரு நாளுக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கீதா தரப்பு, இன்றே விசாரணையை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, நீதிபதி சுஜாதா, 2 மணிநேரம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
பிற்பகலில் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், நீதிபதி சுஜாதாவிடம் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக சங்கீதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுஜாதா, முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.