📅 Monday, 03 August 2026 IST | ஆடி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 03, 2026 04:32 PM

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும்; தவெக கூட்டணி அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும்; தவெக கூட்டணி அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உடனடியாக ஏக்கருக்கு ரூ. 25,000 நஷ்ட ஈட்டை தவெக கூட்டணி அரசு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வலியறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால், இந்த ஆண்டு மேட்டூரில் இருந்து தவெக அரசு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாத நிலையில், ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள சுமார் 1.85 லட்சம் ஏக்கர் நிலத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளைப் பயன்படுத்தி டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொண்டனர்.

ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு உடல் உழைப்போடு சுமார் ரூ.25,000 விவசாயிகளுக்கு செலவாகி உள்ளது. இந்நிலையில், தண்ணீர் இல்லாமல் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிர் செய்த குறுவை நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்துள்ளனர்.

தவெக கூட்டணி அரசு உடனடியாக வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளை டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் அனுப்பி, நெற்பயிர்கள் கருகி பாதிப்படைந்துள்ள நிலங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீதமுள்ள நெற்பயிர்களைப் பாதுகாக்கும் வகையில், விவசாயத்திற்கு 24 மணிநேரமும் விலையில்லா மும்முனை மின்சாரத்தை தொடர்ந்து தடையின்றி வழங்க வேண்டும்.

இவ்வாறு இபிஎஸ் கூறி உள்ளார்.