📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology July 15, 2026 03:34 PM

வியட்நாம் படகு விபத்து: தருமபுரி தொழிலதிபர் உடல் சொந்த கிராமத்தில் அடக்கம்

வியட்நாம் படகு விபத்து: தருமபுரி தொழிலதிபர் உடல் சொந்த கிராமத்தில் அடக்கம்

வியட்நாம் படகு விபத்து: தருமபுரி தொழிலதிபர் உடல் சொந்த கிராமத்தில் அடக்கம்

பிரபல செல்போன் நிறுவனத்தால் வியட்நாமிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்ட தொழிலதிபர் செந்தில்குமார் தனது பிறந்தநாள் அன்று விபத்தில் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது

Published : July 15, 2026 at 11:24 AM IST

தருமபுரி: வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தருமபுரியைச் சேர்ந்த தொழிலதிபரின் உடல் அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தனியார் மொபைல் நிறுவனம், தனது சிறந்த விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை பாராட்டி, வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா அழைத்து சென்றது. அதில் இந்தியாவை சேர்ந்த 32 பேர் சென்றிருந்தனர்.

அவர்கள் அனைவரும் கடந்த ஜூலை 12-ஆம் தேதி தாயகம் திரும்பவிருந்த நிலையில், 11ஆம் தேதி ஃபு குவோக் தீவு அருகில் இருந்து மதிய உணவுக்காக மற்றொரு பகுதிக்குச் சென்ற போது, கரையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் படகு திடீரென கவிழ்ந்தது. அந்த விபத்தில், அப்படகில் இருந்த 32 சுற்றுலாப் பயணிகளில் 15 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்தவர்களில், தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேரும், ஆந்திராவை சேர்ந்த 3 பேரும், கேரளாவைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவர். இந்த விபத்தில் தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமார் (45) உயிரிழந்தார்.

செல்போன் விநியோகிஸ்தராக தொழில் செய்து வந்த செந்தில்குமார், செல்போன் விற்பனையில் சாதனைப் படைத்ததற்காக பிரபல செல்போன் நிறுவனத்தின் சார்பில் வியட்நாமிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு படகு விபத்தில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். செந்தில்குமார் தனது பிறந்தநாள் அன்று, உயிரிழந்தது அக்குடும்பத்தினர் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செந்தில்குமாரின் உடல் மீட்கப்பட்டு வியட்நாமில் இருந்து விமானம் மூலம் மும்பை வழியாக நேற்று மதியம் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை தலைமையில், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் பார்வதி, கடத்தூர் ஆர்.ஐ., சண்முக பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் குழு, செந்தில்குமாரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து, செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) இரவு 7:00 மணியளவில் பெருமாள்கோவில் பட்டியில் உள்ள அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

அப்போது செந்தில்குமாரின் உடலை கண்ட அவரது பெற்றோர்கள் ஜெயவேல், தாய் அருள்மொழி மனைவி பூவிழி, மகள் லேகா ஸ்ரீ உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அரசு சார்பில் அரூர் ஆர்.டி.ஓ செம்மலை, தாசில்தார் பார்வதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பொதுமக்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர், அக்கிராமத்தில் உள்ள இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.